×

40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை ஊரடங்கை தளர்த்த பரிசீலனை: அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காணொலியில் பேச்சு

சென்னை: தமிழகத்தில் மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிக்கலாமா? அல்லது படிப்படியாக தளர்த்தலாமா? என்பது குறித்து 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இன்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு இதுபற்றிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகின்றன. அதில் கேரளா, கர்நாடகாவை தவிர தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், சென்னையில் வரலாறு காணாத அளவில் தொடர்ந்து பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ெதாற்றால் தற்போது 2,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 673 பேர் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம் தமிழகத்தில் 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், ஊரடங்கு 35 நாட்களாக நீடிப்பதால், அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் நிலைமை மோசமாக உள்ளது. சிலர் உணவுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். யாராவது உதவி செய்வார்களா என்று தினமும் எதிர்பார்க்கும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகத் தொடங்கிவிட்டது. தொழில்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி, பசி, பட்டினியால் திணறி வருகின்றனர்.

அதேநேரத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதால், வெளிமாநில தொழிலாளர்களுக்கு தினமும் சாப்பாடு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தொழிலதிபர்கள் உள்ளனர். இதனால் தொழிற்சாலைகளை திறந்தே ஆக வேண்டும். குறைந்த அளவு ஊழியர்களை வைத்து தொழிற்சாலையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல சிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கிவிட்டது. தமிழக அரசு கடன் கொடுத்தால்தான் சிறு, குறு தொழில்களை மீண்டும் தொடங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.  சிறிய கடைக்காரர்கள், ஆட்டோ, டாக்சி தொழிலாளர்கள் தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அதைத் தவிர தமிழகத்துக்கு முக்கிய வருவாயாக கருதப்படும் டாஸ்மாக் மற்றும் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரிதான் அரசின் முதுகெலும்பாக உள்ளது. தற்போது இந்த இரு வருவாயும் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாத நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மே 3ம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நிபந்தனைகளுடன் ஊரடங்கை தளர்த்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 40 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில். தமிழகத்தில் தற்போது ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா? அல்லது ரெட் அலர்ட் பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தனர். குறிப்பாக, “தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலமாக 29 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில நகர் பகுதிகளில் மட்டுமே தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்த இடங்களை தவிர மற்ற இடங்கள் விரைவில் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதனால் வருகிற 3ம் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கை தளர்த்தலாம். இப்படி ஊரடங்கை தளர்த்தும்போது சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அவசியம் பயன்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தலைநகர் சென்னையில் கொரோனா வேகம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. தற்போது 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு முன் பலரும் சாலைகளில் பயணம் செய்தது, காய்கறி வாங்க மார்க்கெட் பகுதிக்கு கூட்டமாக சென்றதை காண முடிந்தது. இதை போலீசார் தடுத்திருந்தால் இந்த முழு ஊரடங்குக்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். அதேபோன்று, தற்போது அதிகளவில் போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீசார் பணியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ள காவலர்களை அதிக பணி சுமை உள்ள பகுதியில் காவலுக்கு நிறுத்த வேண்டாம். அதேபோன்று, எனது வாகனம் செல்லும்போதும் அதிகளவில் போலீசார் பாதுகாப்புக்கு நிற்க வேண்டாம். ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால பயணத்தை எக்காரணத்தை கொண்டும் தடுக்க கூடாது. கொரோனா தொற்று பரவலை இன்னும் விழிப்புடன் கண்காணித்து தடுக்க வேண்டும். அப்படி செய்தால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு விரைவில் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், நாளை (இன்று) அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் ஆலோசனையை கேட்டு ஊரடங்கை 3ம் தேதிக்கு பிறகும் நீடிக்கலாமா? அல்லது படிப்படியாக தளர்த்தலாமா? என்பது குறித்து ஓரிரு நாளில் தமிழக அரசு அறிவிக்கும்” என்றார்.

மக்கள் எதிர்பார்ப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்கள் அதிக பாதிப்பு காட்டக் கூடிய  சிவப்பு மண்டலங்களாகவே உள்ளது. ஒரு சில மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும்,  கிருஷ்ணகிரி பச்சை மண்டலமாகவும் உள்ளது. தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடும் மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,  ஊரடங்கை கடைப்பிடிப்பதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசனை செய்த பின்பு, ஊரடங்கை மே 3ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பு செய்வது தொடர்பான முடிவை  மத்திய அரசு எடுப்பதற்கு முன்பே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

எச்சரிக்கை மண்டலங்கள்
சிவப்பு    15 பேருக்கு மேல் பாதிப்பு அல்லது 4 நாளுக்குள் பாதிப்பு இரட்டிப்பு
ஆரஞ்சு    15க்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பு
பச்சை    28 நாளாக எந்த பாதிப்பும் இல்லாத மாவட்டம்.
தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் 29 மாவட்டங்களும், ஆரஞ்சு மண்டலத்தில் 7 மாவட்டங்களும், பச்சை மண்டலத்தில் ஒரு மாவட்டமும் உள்ளன.


Tags : Edappadi Palanisamy ,IAS officers , 40 IAS Officers, Corona, Chief Edapadi Palanisamy, Curfew, District Collectors, Video
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்