சென்னையில் வைரஸ் தாக்கம் தீவிரமடைகிறது நுங்கம்பாக்கம் ஏட்டு உள்பட 4 போலீசாருக்கு கொரோனா: காவல்நிலையம் தனிமைப்படுத்தப்பட்டது

* தொடரும் தொற்றால் போலீசார் அதிர்ச்சி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் மற்றும் 3 போலீசாருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் பணியாற்றி வந்த காவல் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் கிருமி நாசினி தெளித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்திலேயே சென்னைதான் அதிகப்படியாக நேற்று முன்தினம் வரை 570 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று மூன்றாம் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு இரண்டாம் நிலையில்தான் தொற்று இருப்பதாக கூறி வருகிறது.

இந்நிலையில் சென்னையில்  ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உட்பட 30 பேர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்று வந்த சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வந்த பரங்கிமலை காவலர் குடியிருப்பில் 125 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டது.

அதேபோல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொடர்ந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், சென்னை மாநகர காவல் துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் அனைவரும் படிப்படியாக கொரோனா பரிசோதனை செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அரசு மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனை செய்து வருகின்றனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் அலுவலகம், போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது.

இரண்டு உதவி கமிஷனர்கள் உட்பட 2 இன்ஸ்பெக்டர்கள் என போலீசார் அனைவரும் ஓமந்தூரார் அரசினர் தோட்ட பன்நோக்கு அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கான பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எழுத்தரான தலைமை காவலர் ஒருவருக்கும் மற்றும் உளவு பிரிவு (எஸ்பிசிஐடி) காவலர் ஒருவர் உள்பட மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இரண்டு காவலர்களையும் நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட பன்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், அவரது குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 2 காவலர்களுடன் கொரோனா பரிசோதனை செய்த  நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி உட்பட அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும்  பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ வந்துள்ளது.  ஒரே காவல் நிலையத்தில் இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நுங்கம்பாக்கம் காவல் நிலையம்  கட்டிடம் முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி அடித்து காவல் நிலையத்திற்குள் யாரும் செல்லாதபடி மூடப்பட்டது. இதுவரை சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த  சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது போலீசாரிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Related Stories:

>