×

திருச்சியில் பயங்கரம்: தலை துண்டித்து ரவுடி படுகொலை: போலீசில் சரணடைந்த 3 சகோதரர்கள் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில், பிரபல ரவுடியை தலை துண்டித்து கொன்று போலீசில் 3 சகோதரர்கள் சரண் அடைந்தனர். கொலை மிரட்டலுக்காக தீர்த்துக்கட்டியாக வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி திருவானைக்காவல் வெள்ளி திருமுற்றம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(எ) சந்திரமோகன் (40). பிரபல ரவுடி. இவர் மீது காவல் நிலையங்களில் 3 கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 50 வழக்குகள் உள்ளன.  கடந்த 2009ம் ஆண்டு பால்வியாபாரி நாராயணன் என்பவரை தலையை துண்டித்து கொன்றதால் தலைவெட்டி சந்துரு என அழைக்கப்பட்டார். தொடர்ந்து 2018ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பூ வியாபாரி மற்றும் ஓட்டலில் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றசெயலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இவர் வழக்கு ஒன்றில் சொந்த ஜாமீனில் கடந்த வாரம் வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தனது 2 வயது குழந்தையுடன் மொபட்டில் ஸ்ரீரங்கம் வந்தவர் மீண்டும் வீட்டுக்கு சென்றார். அப்போது ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் குழந்தையுடன் சந்துரு கீழே தடுமாறி விழுந்தார். காரில் இருந்து இறங்கிய 3 பேர், குழந்தையை பாலத்தின் ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு சந்துருவை வெட்டினர். ஆத்திரம் தீராத ஒருவர், சந்துருவின் தலையை அறுத்து தனியே எடுத்து காரில் முன் பகுதியில் உள்ள சீட்டின் கீழே வைத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் சென்றனர். அங்கு இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி 3 பேரும் சரணடைந்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மொபட் அருகே காயத்துடன் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், ஸ்ரீரங்கம் ரயில்வே காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன்கள் சரவணன் (35), சுரேஷ் (30), சரவணன் சித்தப்பா மகன் செல்வகுமார் (25) என்பது தெரியவந்தது. போலீசாரிடம் சரவணன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது: சந்துருவிற்கும், எனக்கும் எவ்வித தொழில் போட்டி கிடையாது. என்னை ஒருமுறை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருந்தார். கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணை ஒன்றுக்காக கோர்ட்டுக்கு ெசன்ற போது, நீ என்னா பெரிய ஆளா, என் பேரே தலைவெட்டி சந்துரு தெரியுமா. இப்போ நினைச்ச கூட உன் தலையை வெட்டி விடுவேன் என மிரட்டினார்.

இனியும் சந்துருவை விட்டு வைத்தால் உயிருக்கு ஆபத்து என நினைத்து சிறையில் இருந்தபோது சந்துருவை கொல்ல திட்டமிட்டேன். மேலும் கொரோனா பீதியால் எனக்கும் கடந்த வாரம் ஜாமீன் கிடைத்தது. இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக என்னை யாரோ நோட்டமிடுவது தெரியவந்தது. இது சந்துருவின் வேலையாகத்தான் இருக்கும் என நினைத்து அவன் முந்திக் கொள்வதற்கு முன் நாம் முந்தி கொள்ள வேண்டும் என நினைத்து சந்துருவை நோட்டம்விட்டு வந்து அவன் தலையை வெட்டி தனியே எடுத்தேன்.
இவ்வாறு சரவணன் தெரிவித்து இருக்கிறார். இவர்களில், கைதான சரவணன் மீது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருச்சி மாவட்டம் நெ.1 ேடால்கேட் காவல்நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இவரது தம்பிகள் 2 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்குகள் உள்ளது.


Tags : Trichy ,Rowdy ,assassination ,brothers , Trichy, Rowdy massacre, police, 3 brothers
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்