×

ஆரம்பகால வாழ்க்கையை மறக்கவில்லை; நர்ஸ் உடையில் வந்த மும்பை மேயர்: செவிலியர்கள் மகிழ்ச்சி

மும்பை: மும்பை மேயர் தனது ஆரம்பகால வாழ்க்கையை மறக்காமல், நர்ஸ் உடையில் மருத்துவமனைக்கு சென்றார். அவரது திடீர் வருகை செவிலியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மேயரான கிஷோரி பெட்னேகர், ஒரு செவிலியர். இவர், அரசியலுக்கு வந்த பிறகு செவிலியர் பணியை மேற்கொள்ளவில்லை. தற்போது கொரோனா நோய்த்தொற்றால் மும்பை மாநகரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த தருணத்தில் தனது பங்களிப்பைச் செய்வதற்காகச் செவிலியர் சீருடை அணிந்துகொண்டு பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனைக்கு மேயர் கிஷோரி பெட்னேகர் திடீரென வந்தார்.

அப்போது அவர், மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுடன் நோயாளிகளின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். தொற்றுநோயைக் கையாளும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி விசாரித்தார். இவரது வருகை, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கிஷோரி பெட்னேகர் கூறுகையில், “நான் ஒரு காலத்தில் செவிலியராகப்  பணிபுரிந்தேன். தொழில்முறையாக உள்ள சவால்களை நன்கு அறிவேன். நான் அவர்களில் ஒருவர் என்பதை செவிலியர் சகோதரிகளுக்கு தெரிவிக்க எனது சீருடையை அணிந்துள்ளேன்.

தொற்று நோய்க்கு எதிரான அவர்களின் வீரம் நிறைந்த போராட்டத்தில் அவர்களை ஊக்குவிப்பதற்காக நர்சிங் ஊழியர்களுடன் உரையாடினேன். இந்த தொற்று நோயை ஒன்றாக சேர்ந்து எதிர்த்துப் போராட நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்” என்றார். சாதாரண மில் தொழிலாளி ஒருவருக்கு மகளாகப் பிறந்த  கிஷோரி பெட்னேகர், அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு செவிலியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1992ம்  ஆண்டு சிவசேனாவின் மகளிர் அணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில், மேற்கு மகாராஷ்டிராவின் ராய்காட் மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் சிவசேனாவுக்காகக் கட்சி பணியாற்றினார்.

2002ல் பிஎம்சி பகுதிக்கு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2012 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இரண்டு முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mayor ,Nurses ,Mumbai ,nurse , Nurse Style, Mayor of Mumbai
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...