×

மேட்டுப்பாளையம் அருகே உணவு தேடி சாலையில் திரிந்த ஒற்றை காட்டு யானை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை உணவு தேடி சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே  ஓடந்துறை கள்ளர் காப்புக்காடு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான யானைகள், காட்டெருமைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களும், வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் காட்டுயானைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.  இன்று அதிகாலை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் ஓடந்துறை பகுதியில் காட்டு யானை ஒன்று சாலையோரத்தில் உள்ள கடைகளில் உணவு தேடி நடமாடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் சைரன் ஒலி எழுப்பியபடி வாகனத்தில் வந்தனர்.

சைரன் ஒலி கேட்ட காட்டுயானை உடனடியாக அருகிலிருந்த தோட்டத்திற்குள் புகுந்தது. இதை தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து நீண்ட நேரம் போராடி யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Mettupalayam ,road , Mettupalayam, wild elephant
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது