×

சமூகவலைதளத்தில் வைரலாகும் தகவலால் பரபரப்பு குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஒத்திவைப்பா?

உடன்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட உள்ளதாக சமூகவலைதளத்தில் தகவல் பரவி வருவதால் பக்தர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும்  மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் நடைபெறும் இத்திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கடும் விரதம் இருந்து நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை பிரித்து கோயிலில் செலுத்துவது வழக்கம்.

மேலும் கிராமப்புறங்களில் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் காணிக்கை வசூல் செய்வர். இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
 தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, திருச்செந்தூர் கோயில் திருவிழாக்கள், கிராமப் புறங்களில் உள்ள கோயில் கொடைவிழா மற்றும் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இது சம்பந்தமாக மேளவாத்தியங்கள், அலங்கார மின் விளக்குகள் அமைப்பதற்கு யாரும் அட்வான்ஸ் கொடுக்க வேண்டாம் எனவும் ஒரு பதிவு வைரலாகி கொண்டிருக்கிறது.

மேலும் இந்து அறநிலையத்துறையின் சார்பில் குலசேகரன்பட்டினம் கோயில் அலுவலகத்தில் உடன்குடி வட்டார கோயில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்களை பதிவு செய்துள்ளனர். இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த கோயில் நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.  இந்நிலையில் மதுரை பார்த்தசாரதி என்ற பெயரில் குலசேகரன்பட்டினம் அன்னை முத்தாரம்மன் பக்தர்களுக்கு ஓர் வேண்டுகோள்! என்று ஆரம்பித்து 2020ம் ஆண்டு தசரா திருவிழா நடைபெறாது என்று நான் நண்பர்களுடன் விளையாட்டாக பேசி வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருந்தேன். இது பக்தர்களின் மனதை புண்படுத்துவதற்காக அனுப்பிய செய்தி அல்ல.

எனது நண்பர்களுடன் விளையாட்டாக பகிர்ந்தது இவ்வளவு தீவிரமானதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். இனி வருங்காலத்தில் இத்தகைய தவறு செய்யமாட்டேன் எனவும் முத்தாரம்மன் பக்தர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அன்னையின் பெயரை பயன்படுத்தி விளையாடுவது பெருங்குற்றம் என்பதனை நான் நன்கு அறிந்து கொண்டேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக முத்தாரம்மன் கோயிலில் அன்னைக்கு பதினொரு தேங்காய் உடைத்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றொரு பதிவும் வலம் வருகிறது. இந்த வாட்ஸ்அப் பதிவு பக்தர்களிடையே பரபரப்பையும் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kulasekharapatnam ,Dasara Function,Social media ,Rumours
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...