×

களக்காடு அருகே வன ஊழியர் உள்பட இருவரை தாக்கியது ஊருக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

*10 மணி நேர போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி போட்டு மீட்பு

களக்காடு : களக்காடு அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த கரடி வனத்துறை ஊழியர் உள்பட இருவரை தாக்கி அட்டகாசம் செய்தது. 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மயக்க மருந்து செலுத்தி கரடியை மீட்டனர்.  நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 1988ம் ஆண்டு 894 சதுர கி.மீ. பரப்பளவில் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. இங்கு புலிகள், சிறுத்தை, செந்நாய், கரடி, யானை உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை அடிக்கடி மலையடிவார பகுதிகளில் புகுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக சிங்கிகுளம் பொத்தையில் 4 கரடிகள் சுற்றித் திரிந்ததை விவசாயிகள் பார்த்து பதறினர்.

 இந்நிலையில் களக்காடு அருகே தெற்கு அப்பர்குளத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் கரடி புகுந்தது.  இதைப்பார்த்த அப்பகுதியினர் சிலர், விரட்டியபோது கரடி அங்குள்ள தெருக்களில் சுற்றி வந்தது. இதைக்கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இருந்தபோதும் இளைஞர்கள் துணிச்சலாக திரண்டு வந்து கரடியை விரட்டியதோடு களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த புலிகள் காப்பக துணை இயக்குநர் இளங்கோ தலைமையிலான வனச்சரகர்கள் புகழேந்தி, பாலாஜி மற்றும் வனத்துறையினர்  கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கரடியோ தெற்கு அப்பர்குளத்தில் இருந்து, வடக்கு அப்பர்குளம், நடுவகுளம், செட்டிகுளம் வழியாக சுமார் 10 கி.மீ.தூரம் ஓடிக் கொண்டே இருந்தது. வனத்துறையினரும், இளைஞர்களும் கரடியை பிடிக்க துரத்தி சென்றனர். ஒரு கட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொத்தை புதர்களில் கரடி பதுங்கியது.

இதனை பார்த்த வனத்துறையினர் கரடியை நாலாபுறமும் சுற்றி வளைத்து வலையை பிடித்து கரடியை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது கரடி வேட்டை தடுப்பு காவலர் சுந்தரை கடித்தது. அதன்பின் வலையில் இருந்து தப்பிய கரடி செட்டிகுளம் வயல்வெளிக்குள் நுழைந்தது. கரடி வயலுக்குள் ஓடி வருவதை பார்த்த விவசாயிகள் ஓட்டம் பிடித்தனர். அப்போது பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேல உப்பூரணியை சேர்ந்த செல்வராஜ் (60) என்ற விவசாயியை கரடி கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 தொடர்ந்து கரடி அங்கிருந்த ஒரு வாழைத் தோட்டத்துக்குள் சென்று பதுங்கியது. வலை விரித்து கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனைதொடர்ந்து நெல்லையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 3 முறை துப்பாக்கி மூலம் கரடிக்கு மயக்க மருந்து செலுத்தினர். இதனால் கரடி மயங்கி விழுந்தது. மயங்கிய கரடியை வனத்துறையினர் மீட்டு சென்று அதனை களக்காடு செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட கரடி 7 வயது ஆண் கரடி ஆகும்.

10 மணி நேர போராட்டம்

அதிகாலை 6 மணிக்கு கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கரடி ஓடிக்கொண்டே இருந்ததால் அதனை பிடிக்க முடியவில்லை. பிடிக்க செல்லும் பொதுமக்கள் மீது கரடி பாய்ந்ததால் இளைஞர்கள் பயந்து பின் வாங்கினர். 10 மணி நேர போராட்டத்திற்கு பின் வாழைத்தோட்டத்தில் பதுங்கிய கரடிக்கு மயக்க மருந்து செலுத்தி மாலை 4 மணிக்கு வனத்துறையினர் பிடித்தனர். கரடியை காண அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் திரண்டு வந்த வண்னம் இருந்தனர்.

3 கரடிகள் சிக்குமா?

இதுகுறித்து அப்பர்குளத்தை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் கூறுகையில், ‘‘4 கரடிகள் இப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த கரடி அப்பர்குளத்தில் உள்ள  ஒரு தோட்டத்தில் சப்போட்டா பழங்களை ருசித்து சாப்பிட்ட போதுதான் பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் சுற்றிவரும் 3 கரடிளையும் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நிவாரணம்

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இளங்கோ, கரடியை பிடிக்க ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள், வனத்துறை ஊழியர்கள், மருத்துவ குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அத்துடன் கரடி கடித்து படுகாயம் அடைந்த இருவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : forest employee ,Kalukkadu ,Destroyed Agricultural Lands ,Kalakad Bear Attack Farmers and Forest Officers , kalakad ,Bear Attack ,Bear ,Farmers ,Forest officials
× RELATED நெல்லை அருகே பாலம் இல்லாததால்...