×

சேலம் கொரோனா வார்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மன அழுத்தத்தில் நர்சுகள் தவிப்பு

சேலம் : சேலம் கொரோனா வார்டில் பணியாற்றும் நர்சுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் உயர்வான பணியை டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு  மரியாதை செலுத்தும் விதமாக, அவர்களை பாராட்டும் வகையில் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அந்ேநாய் தொற்றுக்கு ஆளாகி உயிரையும் தியாகம் செய்துள்ளனர். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கபடவில்லை என்பதால், அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 5  பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள், நர்சுகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழு 7 நாட்கள் பணியாற்றினால் 7 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு பிறகே வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.

இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வரும் செவிலியர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கொரோனா பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் கூறியது: கொரோனா வார்டில் பணியாற்றுவதற்கு 30 பேர் கொண்ட செவிலியர்கள் குழுவினர் நியமிக்கப் பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறோம். 7 நாட்கள் பணியாற்றினால் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தங்கியிருக்கிறோம். எங்கள் வீட்டிற்கு கூட செல்லமுடியாது. குழந்தைகளிடம் செல்போனில் தான் பேசுகிறோம். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை தாங்கக்கூடிய உணவு எங்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

காலையில் 2 சப்பாத்தி அல்லது பிரெட் ஆம்லெட் வழங்குகின்றனர். மதியம் சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது. இரவு இட்லி, உப்புமா ஆகியவை கொடுக்கிறார்கள். 2 சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு, வார்டில் பணியாற்ற முடியுமா? சத்தான உணவு என்பதே இல்லை. ஆனால் நோயாளிகளுக்கு காலையில் இட்லி, உப்புமா, ஒரு கப் பால், 2 முட்டையும், 11 மணிக்கு ஆரஞ்சு ஜுஸ், பகல் சாப்பாடு, ஆம்லெட், கீரை மற்றும் பொரியல் வழங்கப்படுகிறது. 3 மணிக்கு சுண்டல், ஒரு கப் பால், இரவுக்கு இட்லி, சாம்பார், மற்றும் பழ வகைகளும் உணவாக வழங்கப்படுகிறது.

ஆனால் எங்களுக்கு ஒரு கப் பால் கூட கிடையாது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடும்பத்தை பிரிந்திருக்கும் எங்களின் மனதை ரிலாக்ஸ் செய்து பொழுதை கழிப்பதற்கு டிவி வசதி கூட செய்து தரப்படவில்லை. ஒரே குளியல் அறையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் மனஅழுத்தம் தான் ஏற்படுகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் டாக்டர்கள், செவிலியருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Nurses ,facilities ,Salem Corona Ward ,ward government nurses , Salem,under stress ,Basic Facility
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...