×

நெல்லைக்கு சரக்கு ரயிலில் கொச்சியில் இருந்து 1331 மெட்ரிக் டன் உரம் வருகை

நெல்லை :  கொச்சியில் இருந்து நெல்லைக்கு சரக்கு ரயிலில் 1331 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் வந்து சேர்ந்தது. இங்கிருந்து 4 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்தது. அடுத்த பருவமாக கார் பருவ நெல் சாகுபடி ஜூன் 1ம் தேதி தான் தொடங்கும். எனவே பிசான பருவ நெல் சாகுபடி முடிந்ததும் விவசாயிகள் வாழை உள்ளிட்ட காய்கறி பயிர்கள் பயிரிடுவது வழக்கம். தாமிரபரணி பாசனத்தில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, பத்தமடை, தூத்துக்குடி மாவட்டத்தில் வைகுண்டம், கருங்குளம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழை மற்றும் காய்கறி பயிர்கள் பயிரிடுவது வழக்கம்.  

இந்த பயிர்களுக்கு தழைச்சத்து மற்றும் மணிச்சத்துக்கு பாக்டம்பாஸ் உரம் பயன்படுத்தப்படும். இதற்காக பாக்ட் உர நிறுவனம் சார்பில் பாக்டம்பாஸ் உரம் 1331 மெட்ரிக் டன் கொச்சியில் இருந்து ரயில் மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சரக்கு ரயில்களில் உரம், அரிசி ஆகியவை நெல்லை வந்த வண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் வரப்பெற்ற  பாக்டம்பாஸ் உரம் 1331 மெட்ரிக் டன் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் நெல்லை, தென்காசி  மாவட்டங்களுக்கு 897 மெட்ரிக் டன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 354 மெட்ரிக் டன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 80 மெட்ரிக் டன் என நான்கு மாவட்டங்களுக்கும் லாரிகளில் பிரித்து அனுப்பப்பட்டது.

Tags : Arrival ,Cochin In Good Trains ,kochi ,nellai , nellai,kochi ,Fertilizer ,Good Trains
× RELATED வசந்த காலத்தை வரவேற்கும் வகையில்...