×

தடையை மீறி உணவை பார்சல் செய்து எடுத்துச் சென்றதால் பிரச்னை அம்மா உணவகத்தில் அதிமுகவினர் ‘குஸ்தி’

*ராஜபாளையத்தில் பரபரப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் அம்மா உணவகத்திலிருந்து உணவு பார்சல் வெளியே கொண்டு செல்ல தடையிருந்தும், அதை மீறி எடுத்துச் செல்ல முயன்றதால் அதிமுகவினர் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் முதல் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகத்தில் இருந்து நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்களுக்கு பார்சல் மூலம் உணவு கொண்டு செல்லப்பட்டது. இங்கிருந்து அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கரன், முறையின்றி பார்சல்களை கொண்டு செல்வதால் பொதுமக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையடுத்து கலெக்டர் கண்ணன் உத்தரவின் பேரில், அம்மா உணவகங்களில் இருந்து பார்சல் ெவளியே கொண்டு செல்வது நேற்று முன்தினம் முதல் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில், அம்மா உணவகத்திற்கு நேற்று வந்த அம்மா பேரவை நகரச் செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவினர், அங்கு உணவு பார்சல் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த அதிமுக, நகரச் செயலாளர் பாஸ்கரன், அம்மா பேரவை நகரச் செயலாளர் முருகேசனிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இதனால் அம்மா உணவக ஊழியர்கள் தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு இல்லை என சிறிது நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் மற்றும் போலீசார் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாக சமாதானம் செய்ததால், ஊழியர்கள் பணிக்கு சென்றனர். ஆளுங்கட்சியினரிடையே நடந்த உட்கட்சி பூசலால் உணவு வாங்க வந்த பொதுமக்கள் நீண்டநேரம் உணவுக்காக காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

அம்மா பேரவை நகரச் செயலாளர் முருகேசன் கூறுகையில், ``பொதுமக்களுக்கென இலவசமாக வழங்கப்படும் உணவு தினமும் அளவுக்கு மீறி வெளியே கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் உணவின்றி திரும்பி செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்து கேட்க வந்த என்னிடம், பாஸ்கரன் முறையற்ற வகையில் நடந்து கொண்டார். அத்துடன் அவர் சார்பு பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்’’ என்றார்.
அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ``தூய்மை பணியாளர்களுக்கு கொண்டு செல்ல இருந்த உணவு பார்சல்களை தவறாக புரிந்து கொண்டதால் பிரச்னை ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளேன்’’ என்றார்.

இதற்கிடையே, அதிகாரிகளின் உத்தரவையடுத்து, பார்சல் செய்த உணவுகள் மீண்டும் பாத்திரத்தில் கொட்டப்பட்டு, அம்மா உணவகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதிமுகவினர் இருதரப்பினராக மோதிக்கொண்டது உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சியினர் நுழைவதற்கு தடை

ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் கூறுகையில், ``ராஜபாளையம் நகராட்சியில் தான் தினமும் அதிகளவாக, 2 ஆயிரத்து 800 பேருக்கு இலவச உணவு தரமாக விநியோகம் செய்யப்படுகிறது. முன்புறம் நிழலுக்காக கொட்டகை, வரிசைக்காக கம்பு அமைத்து நோய் எதிர்ப்பிற்காக மல்லி, மிளகு துவையல் ஏற்பாடு செய்து வருகிறோம். கட்சியினரிடையே போட்டியால் இச்சம்பவம் நடந்து விட்டது. தற்போது உட்புறம் கேமரா பொருத்தப்பட்டு அரசியல் கட்சியினர், வெளிநபர்கள் நுழைய தடை விதித்துள்ளோம்’’ என்றார்.

Tags : Promenade Mother Restaurant Rajapalayam ,ADMK Cadres Fights ,Amma unavagam , rajapalayam ,ADMK Cadres ,Amma unavagam
× RELATED அம்மா உணவகங்களில் விலையில்லா உணவை நிறுத்தியது சென்னை மாநகராட்சி