×

மதுரையில் எஸ்எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு

*தீயணைப்பு நிலையமும் மூடப்பட்டது

மதுரை : மதுரையில் சிறப்பு எஸ்ஐ, ஏட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன், மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது. மதுரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மதுரை நகர் தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் சிறப்பு எஸ்ஐ மற்றும் ஏட்டு ஆகிய 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்கள் 2 பேரும் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் 71 போலீசாருக்கும், மீனாட்சியம்மன் கோயில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 15க்கும் மேற்பட்டவர்களுக்கும் மாநகராட்சி சார்பில் திடீர் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ஸ்வாப் முறையில் நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் யாரும் செல்ல வேண்டாம் என மாநகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் போலீஸ் ஸ்டேஷன் நேற்று முன்தினம் இரவு மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

மாற்று இடம் கிடைக்கும் வரை ஸ்டேஷன் முன்புள்ள சாலையில் ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. விரைவில் மாற்று கட்டிடம் பிடித்து அதில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். இதேபோல் மீனாட்சியம்மன் கோயில் மேற்கு கோபுர வாசலில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறன்றனர். இதில் நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

Tags : Madurai ,SSI ,corona police station ,Police Station ,Madurai Therkuvasal ,Corona ,wqas , Corona, Lockdown,Madurai, Therkuvasal,Police Affected Corona
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...