×

போலீஸ் ஸ்டேஷனில் பலியான சம்பவம் இன்ஸ்பெக்டர், ஏட்டு காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்ட தாய்: மகனின் வீடியோ வைரலாவதால் பரபரப்பு

சேலம்: சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து இறந்த மூதாட்டி, சாகும் முன் இன்ஸ்பெக்டர் உள்பட அனைவரின் காலில் விழுந்து கதறினார் என அவரது மகன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. சேலம் அம்மாப்பேட்டை 8வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலாமணி(70). இவரது மகன் வேலுமணி(53). கடைவீதியில் எலுமிச்சம்பழம் பழவியாபாரம் செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலையொட்டி ஊரடங்கு உத்தரவால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை உத்தரவை மீறி, வியாபாரம் செய்த வேலுமணியை டவுன் போலீசார் கைது செய்தனர். அவரை விட்டு விடுமாறு கூறி ஸ்டேசனுக்கு சென்ற அவரது தாய் பாலாமணி மயங்கி விழுந்து பலியானார். பாலாமணியின் மகன் வேலுமணி, ஸ்டேஷனில் நடந்தது குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவிவருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: 40 வருடங்களாக எனது தாய் எலுமிச்சை வியாபாரம் செய்து வருகிறார். 24ம்தேதி கடையில் இருந்த எலுமிச்சம் பழங்களை வெளியே எடுத்தேன்.

அப்போது ஏட்டு ஒருவர் உள்ளே வந்து தாயின் கண்முன்னே என்னை கொடூரமாக தாக்கினார். மறுநாள் கடையில் இருந்த எலுமிச்சம் பழங்களை வெளியே எடுத்து செல்வதற்காக கடையை திறந்தேன். அப்போது அதே ஏட்டு மீண்டும் வந்து என்னை கைது செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனது உடைகளை அவிழ்க்கச் செய்து தாக்கினர். அப்போது என் தாய் பாலாமணி ஸ்டேஷனுக்கு வந்தார். அவரை அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். அதன்படி அனைவர் காலிலும் விழுந்து கண்ணீர் விட்டு எனது தாய் மன்னிப்பு கேட்டார். அப்போது அங்கு வந்த ஏட்டுவிடமும் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர், தகாத வார்த்தையால் திட்டினார். அப்போதுதான் திடீரென மயங்கி விழுந்து, எனது தாயார் பலியானார். போலீசாரின் அலட்சியத்தின் காரணமாக எனது தாய் பலியானார். இதற்கு காரணமான இன்ஸ்பெக்டர், ஏட்டு மீது அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். வைரலாகும் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Inspector ,police station , Inspector , police killed , police station, falls , foot
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு