தமிழக - ஆந்திர எல்லையில் சாலை குறுக்கே கட்டிய தடுப்பு சுவர் இடித்து அகற்றம்: சித்தூர் கலெக்டர் கோரிக்கையால் நடவடிக்கை

வேலூர்: தமிழக- ஆந்திர எல்லையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புசுவர் சித்தூர் கலெக்டர் வேண்டுகோளின்படி இடித்து அகற்றப்பட்டது. ெகாரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து அவற்றுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களும் வேறு பாதைகள் வழியாக எல்லையை கடக்க முயற்சிப்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக- ஆந்திர எல்லை சாலைகளில் தடை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சாலைகளின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகுண்டா, பொன்னை மாதாண்டகுப்பத்திலும் தமிழக- ஆந்திர எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில் பொன்னை மாதாண்டகுப்பத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளதால் சித்தூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆந்திர மக்கள் காட்பாடி கண்டிப்பேடு அருகில் உள்ள உள்ளிப்புதூர் ஒட்டந்தாங்கல் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகின்றனர். அதேபோல் இங்குள்ளவர்களும் இந்த பாதையை பயன்படுத்த தொடங்கினர். இதையடுத்து உள்ளிப்புதூர் கிராமத்தை ஒட்டி ஆந்திர எல்லைக்குள் செல்லும் தார்ச்சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணியை நேற்று காலை வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்டனர். இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எல்லைச்சாலைகளான குடியாத்தம் சைனகுண்டா, பொன்னை மாதாண்டகுப்பம் எல்லைப்பகுதிகள் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், அத்தியாவசிய பணிகள் நிமித்தமாக வரும் வாகனங்கள் சுற்றி வரும் நிலை ஏற்படும். எனவே சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர்களை அகற்ற வேண்டும் என்று சித்தூர் கலெக்டர் நாராயணபரத்குப்தா கேட்டுக் கொண்டார். அதன் பேரில் எல்லையில் நேற்று முன்தினம் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்களை இடித்து அகற்ற வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டதன்பேரில் அவை இடித்து அகற்றப்பட்டன.

Related Stories:

>