×

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி முடக்க உத்தரவை திரும்ப பெறவேண்டும்: மத்திய அரசுக்கு தொமுச வலியுறுத்தல்

சென்னை: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை முடக்கிய உத்தரவை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் உயர்ந்துள்ள விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2020 முதல் வழங்கப்பட வேண்டிய 4 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு உட்பட அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியின் மூன்று தவணைகளை ஒட்டு மொத்தமாக முடக்கி தன்னிச்சையாக அரசு வெளியிட்ட உத்தரவு, 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும்,  ஓய்வுகால வாழ்க்கையை பென்ஷன் வருவாயை மட்டுமே நம்பி நகர்த்திக் கொண்டிருக்கிற 65 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏழாவது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி 25 சதவீதத்தை எட்டும்போது, தற்போது அரசு ஊழியர்கள் பெற்று வரும் வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டு தற்போதுள்ள சென்னை உள்ளிட்ட ‘எக்ஸ்’ நகரங்களுக்கு 24 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாகவும், ‘ஒய்’ நகரங்களுக்கு 16 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், ‘இசட்’ நகரங்களுக்கு 8 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படுவதும் அரசின் இந்த உத்தரவினால் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அரசின் இந்த உத்தரவை காரணம் காட்டி அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படும் அபாயமும் உள்ளது. அரசின் இந்த தாக்குதல் தொழிலாளர்களின் மன உளைச்சலை அதிகப்படுத்தி அவர்களின் செயல்பாடு மற்றும் உற்பத்தி திறனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசு உணர வேண்டும். எனவே அரசு தற்போது வெளியிட்டுள்ள உத்தரவை உடனடியாக திரும்ப பெறுவதோடு ஏற்கனவே மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த 4 சதவிகித அகவிலைப்படியை வழங்குவதற்கான உத்தரவை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : servants ,government , Government employees, according to the government
× RELATED ஐகோர்ட் கிளை உத்தரவு அரசு பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்