×

ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் முறைகேடு தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் நடந்த முறைகேடு குறித்து தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விசிக தலைவர் திருமாவளவன்: ரேபிட் டெஸ்ட் கிட்வாங்கியதில் இடைத்தரகர்கள் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 5 லட்சம் கருவிகள் வாங்கியதில் சுமார் 18 கோடி ரூபாய் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளனர். சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து  245 ரூபாய்க்கு வாங்கிய கருவியை 600 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளனர். இது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முன்கூட்டியே தெரியாதா? தெரிந்துதான் இந்த இடைத்தரகர்களிடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டதா? என்ற விவரங்களைய் தமிழக அரசு வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: கொரோனா விரைவுப் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடந்திருப்பதை டெல்லி உயர் நீதிமன்ற விசாரணை அம்பலப்படுத்தி இருக்கிறது. விரைவுப் பரிசோதனை கருவி ஒன்று ரூபாய் 225 என்று சீன நிறுவனங்கள் விற்பனை செய்வதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இடைத்தரகர்கள் அமர்த்தி ரூபாய் 600 க்கு கொள்முதல் செய்து பெரும் தொகை பார்த்துள்ளது. சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் விரைவுப் பரிசோதனை கருவி ஒன்று ரூபாய் 400 க்கு வாங்கியதை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரூபாய் 600 கொடுத்து கொள்முதல் செய்ய யார் அழுத்தம் கொடுத்தது?பொது மக்கள் உயிரோடு விளையாடிய ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது போன்ற விபரங்களும் விசாரணையில் வெளிவர வேண்டும்.

இதில் தொடர்புள்ள ‘நபர்கள்’ யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றம் புரிந்தவர்கள் என்ற முறையில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எரியும் வீட்டில், பிடுங்கியது லாபம்“ என்ற சுயநல ஆதாயம் தேடும் இந்த ஈனச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்வாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல், விரைந்து விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும்.  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சத்தீஷ்கர் மாநில அரசு இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ 337 க்கு (ஜி.எஸ்.டி. வரி தனி) வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு கருவியின் விலை ரூ.600 மற்றும் ஜி.எஸ்.டி. 12 சதவீதம் அதாவது ரூ 72 என ஒரு கருவியை ரூ 672க்கு வாங்கியிருப்பதாகச் அறிக்கை வெளியிட்டது.

நீதிமன்ற விசாரணையின்போது தமிழ்நாடு அரசு சாகன் பயோடெக் என்ற டீலர் மூலமாக மேட்ரிக் லேப் நிறுவனத்தை நேரடியாக அணுகி ரூ 600 என்ற விலைக்கு 50,000 கருவிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இது விதி மீறல்’ என்ற ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தது ரேர் மெட்டோபாலிக் நிறுவனம். கொரோனா ஊரடங்கின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் விழிபிதுங்கி, அடிப்படை உணவுக்கு கூட வழியின்றி தவித்துவரும் நேரத்தில், இப்படி ஒரு பகல் கொள்ளையை நடத்தத் துணிந்த மனசாட்சியற்ற பழனிசாமி அரசை நோக்கி இன்னும் ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன. இதுவரை நடந்த மருத்துவ கருவிகள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல் விஷயங்களையும் பற்றி ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்.

Tags : leaders ,party ,Government ,purchase , Rapid test kit, abuse, Tamil Nadu government, political party leaders
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...