×

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் 2வது நாளாக முழு ஊரடங்கு

* நடைபயிற்சிக்கும் அனுமதியில்லை
* சென்னையில் மயான அமைதி

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் 2வது நாளாக நேற்றும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நடைபயிற்சி செல்ல கூட போலீசார் அனுமதிக்கவில்லை. சாலைகளில் வாகனங்கள் எதுவும் ஓடாததால் பரபரப்பாக காணப்படும் மாநகராட்சி பகுதிகளில் மயான அமைதி நிலவியது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 1,885 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,020 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில், 26ம் தேதி (நேற்று முன்தினம்) அதிகாலை 6 மணியில் இருந்து 29ம் தேதி இரவு 9 மணி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சேலம், திருப்பூர் மாநகராட்சியில் நேற்று முன்தினம் முதல் 28ம் தேதி (இன்று) வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் 4 நாட்களும், நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று முன்தினம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. நேற்று 2வது நாள் முழு ஊரடங்கையொட்டி சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சேலம், திருப்பூரிலும் இதே நிலை நீடித்தது.

சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிகாலையில் பொதுமக்கள் பலரும் நடைபயிற்சி செல்வது உண்டு. நேற்று முன்தினம், நேற்று அதிகாலையில் சாலைகளில் நடைபயிற்சி செய்ய வந்தவர்களை போலீசார் திருப்பி வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அதேபோன்று சாலைகளில் சென்ற ஒன்று, இரண்டு வாகனங்களையும் போலீசார் மறித்து, அடையாள அட்டையை காண்பித்த பிறகே செல்ல அனுமதி அளித்தனர். சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் இதேநிலை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று போலீசார் கூறினர்.

அதேநேரம் மருத்துவமனை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு மற்றும் காய்கறிகள் எடுத்துச் செல்பவர்கள் சாலைகளில் பயணம் செய்ய எந்தவித தடையும் இல்லாமல் அனுமதி அளித்தனர். கார், பைக், லாரி, பஸ்கள் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மாநகராட்சி பகுதி சாலைகள், தெருக்களில் எந்த நடமாட்டமும் இல்லாததால் மயான அமைதி நிலவுகிறது.


Tags : municipalities ,Coimbatore ,Madurai ,Chennai , Chennai, Coimbatore, Madurai, full curfew
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு