×

கல்லூரிப் படிப்பு முடிந்து வெளியில் வரும் 85 லட்சம் பட்டதாரிகள் எதிர்காலம் என்ன? கனவை கலைத்துப்போடும் கொரோனா,..அதிர்ச்சியில் பெற்றோர், மாணவர்கள்

* 2018 கல்வியாண்டில் இளநிலை படிப்பை 64.7 லட்சம் பேரும், முதுநிலை படிப்பை 15 லட்சம் பேரும் முடித்துள்ளனர்.  இந்த ஆண்டு புதிய பட்டதாரிகள் 85 லட்சம் பேர் வெளியில் வருகின்றனர்.
* சுமார் 10 முதல் 14 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் வெளிவருவார்கள்.
*  ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற பாஜக பிரசாரம் செய்து வெற்றி பெற்றது. ஆனால், வேலைவாய்ப்பு இழப்பதுதான் அதிகரித்துள்ளது.
* இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு சுமார் 1 சதவீதம் முதல் 1.8 சதவீதத்துக்குள் உயரும் என பல்வேறு அமைப்புகள் கணித்துள்ளன. இதுகூட சாத்தியம் ஆகாவிட்டால், நிலைமை படுமோசமாகிவிடும்.

சென்னை: படித்து முடித்ததும் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும் என்பது இளைஞர்களின் ஆசை. ஏதோ ஒரு வேலை என்பதை விட, இந்த துறையில்தான் சாதிக்க வேண்டும்; இப்படிப்பட்ட வேலைதான் வேண்டும் என்று கனவில் மிதக்கும் இளைஞர்களுக்கும் பஞ்சமில்லை. சில கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே நிறுவனங்கள் அள்ளிக்கொண்டு செல்கின்றன. சிலர், கல்லூரியை விட்டு வெளியில் வந்த பிறகுதான் வேலை பற்றி யோசிக்கின்றனர்.   படிப்பை முடித்த பிறகு ஏற்படக்கூடிய கவலை, பல இளைஞர்களுக்கு இப்போதே தொற்றிக்கொண்டு விட்டது. படித்து முடித்ததும் வேலை என்ற நிலை மாறி, வெளியில் வந்ததும் வேலை கிடைக்குமா  என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனாதான்.

 ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற பாஜக பிரசாரம் செய்து வெற்றி பெற்றது. ஆனால், வேலைவாய்ப்பு இழப்பதுதான் அதிகரித்துள்ளது. ஆனால், வேலை வாய்ப்புகள் இழப்பதுதான் அதிகரித்ததே தவிர, ஒரு போதும் வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. பாதிக்கப்படாத துறைகளே இல்லை என்ற அளவுக்கு துறைதோறும் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டன.  போதாக்குறைக்கு, இந்த ஆண்டு துவக்கத்திலேயே கொரோனா மொத்தமாக வேட்டு வைத்து விட்டது. சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து நிறுவனங்கள் மூடப்பட்டதால், அதை சார்ந்துள்ள இந்திய தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய துறைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால், இருப்பவர்களுக்கே வேலை இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.

 இந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் புதிதாக 85 லட்சம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் பட்டப்படிப்பை முடித்து விட்டு வெளியில் வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனாவால் கல்வியாண்டு நிறைவடைவது 8 மாதங்கள் வரை தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும், கொரோனாவால் பல நிறுவனங்கள் நிதிச் சிக்கலில் தவிப்பதால், புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளன. ‘கடந்த ஓராண்டில் எம்பிஏ முடித்தவர்கள் பலருக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலை கிடைத்தது. இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடிப்ப வர்களுக்கு பயிற்சியாளராக கூட சேர முடியுமா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பவர்களே வேலையை தக்க வைக்க போராடும்போது, புதிதாக வருபவர்களின் கதியை என்னவென்று சொல்வது?. அடுத்த 3 முதல் 4 மாதங்கள் வரை நிறுவனங்கள் எப்படி தாக்குப்பிடிக்கின்றன என்பதை பொறுத்துதான் இதை முடிவு செய்ய இயலும்’ என, வேலை வாய்ப்பு நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

கடந்த 2018ம் கல்வியாண்டிலேயே இளநிலை படிப்பை 64.7 லட்சம் பேரும், முதுநிலை படிப்பை 15 லட்சம் பேரும் முடித்துள்ளனர்.  இதில், சட்டம், இன்ஜினியரிங், மருத்துவம், கல்வி, நிர்வாக படிப்புகள் அடங்கும். ஒவ்ெவாரு ஆண்டும் 10 முதல் 14 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் உருவாகிறார்கள். இந்த ஆண்டும் இதே அளவு இன்ஜினியரிங் பட்டதாரிகள் வெளிவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு முடித்து வருபவர்களில் 75 சதவீதம் பேர், மேற்படிப்பை விட வேலை தேடுவதில்தான் கவனம் செலுத்துவார்கள் என தெரிகிறது.

எப்படியும் இன்னும் 6 மாதங்களுக்கு, வேலைக்கு ஆள் தேர்வு என்பதே நடைபெறாது. கொரோனாவால் பொருளாதார சரிவு ஆண்டு முழுவதும் நீடித்தால், அவர்கள் வேலைக்கு காத்திருப்போர் பட்டியலில்தான் இடம்பெற வேண்டியிருக்கும் என மற்றொரு வேலை வாய்ப்பு நிறுவனம் கூறுகிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை புதிய பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : graduates ,parents ,Corona , College study, 85 lakh graduates, corona, parents, students
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...