×

டாஸ்மாக்கில் இருந்து குடோன்களுக்கு மாற்றியபோது அதிகாரிகள் 80 சதவீத மதுவை பதுக்கினர்: நெருக்கமானவர்களுக்கு கை மாற்றியதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு

* 500க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக்கில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்தது.  இதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களை குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. அந்தந்த மாவட்ட மேலாளர்கள் தலைமையில் ஊழியர்கள் மதுபானங்களை இடமாற்றம் செய்தனர். இப்படி மதுபானங்களை இடமாற்றம் செய்யும்போது சரக்கு இருப்பு குறைவதாக பல புகார் எழுந்தன.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது: டாஸ்மாக் அதிகாரிகள் தங்களுக்கு நெருங்கியவர்களுக்கு மதுபானங்களை வழங்க ஊழியர்கள் உதவியுடன் மதுபானங்களை இடமாற்றம் செய்யும் பொழுது பதுக்கிவிட்டனர்.  குறிப்பாக,  ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் 17 கடைகளில் மதுபானங்கள் முழுமையாக இருப்பு குறைந்துள்ளது. 10 சதவீதம் மட்டுமே உள்ளது.  இதேபோல் திருவண்ணாமலையில் 22 கடைகளிலும், திருவள்ளூரில் 13 கடைகளிலும், காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கில் 15 கடைகளிலும், சென்னையில் 6 கடைகளிலும், திருச்சியில் 17 கடைகளிலும், கடலூரில் 13 கடைகளிலும், மதுரையில் 18 கடைகளிலும், கோவையில் 27 கடைகளிலும், நாமக்கல்லில் 23 கடைகளிலும் மதுபான இருப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது.

மொத்தமாக 171 கடைகளில் மதுபானங்கள் மார்ச் 24ம் தேதிக்கு பிறகு 80 சதவீதம் இருப்பு குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் இருப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது.  இதுகுறித்து ஊழியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் இருப்பு குறைந்ததற்கு யார் காரணம் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக முடிந்து டாஸ்மாக் கடைகள் மறுபடியும் திறக்கப்படும் போது கடைகளில் உள்ள இருப்பு எவ்வளவு என்பதை ஆய்வு செய்த பிறகு டாஸ்மாக் கடைகளை திறக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஊரடங்கு சமயத்தில் மதுபானங்களில் லட்சக்கணக்கான தொகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியாமல் போய்விடும். இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.

Tags : Tasmac , TASMAC, officers, staff, corona
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்