×

300 பாக். தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு: ராணுவம் அதிர்ச்சி தகவல்

காஷ்மீர்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து 300 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். அவர்கள் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் பதுங்கி உள்ளனர் என்று இந்திய ராணுவத்தின் நுண்ணறிவு, தொழில்நுட்ப நுண்ணறிவு பிரிவுகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நகரில் இருந்து டெல்லி அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் நவ்ஷேரா, சாம்ப் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இடங்களில் 16 ஏவுதளங்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தயார்நிலையில் வைத்திருப்பதாகவும் அதன் வழியாக குல்மார்க் பகுதிக்குள் ஊடுருவ முயற்சிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஊடுருவலை தடுக்கவும் சமாளிக்கவும் ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுவும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தீவிரவாதிகளில் யாருக்கேனும் தொற்று இருந்து பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊடுருவலை முறியடிக்கும் பிரிவினர், தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லும்போது பாதுகாப்புடன் சடலங்களை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரில் கேரான் பகுதியில் உள்ள லீபா பள்ளத்தாக்கு, அத்முகாம், துத்னியால் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும் கடந்த 1ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பிலும் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

வழக்கமாக கோடைக் காலத்தில் செயல்பாட்டில் இருக்கும் துமாயில், சர்தாரி, தாக்கி ஏவுதளங்களிலும் இது தவிர, ஷார்டி, நீலம் பள்ளத்தாக்கு, நவ்ஷேரா, சாகோட்டி, கோஜா பந்தி, ஹாஜி பீர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Terrorists Intruder Waiting: Military Shock Information , Bagasadan, militants, military
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...