×

கழிவுகள் சேர்ந்தால் சிக்னல் கொடுக்கும் ஸ்மார்ட் குப்பை தொட்டி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, கழிவுகள் சேருவதை தொலைவில் இருந்து சிக்னல் கொடுக்கும் புதிய வகை `ஏர் பின் ஸ்மார்ட் குப்பைத் தொட்டியை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி.யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்ற மகிக் மகேந்திர ஷா கூறியதாவது:
கொரோனா தொற்று நிலவும் சூழலில் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், ஹாட் ஸ்பாட், தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளால் வைரஸ்  அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ரிமோட் மூலம் செயல்படும் புதிய வகை `ஏர் பின் ஸ்மார்ட் குப்பைத் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியை குப்பைத் தொட்டியின் மூடி அல்லது அருகில் உள்ள சுவர் அல்லது கம்பங்களில் பொருத்தலாம். இந்த ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகள் கழிவுகள் நிரம்பி வழியும் நேரத்தில் சுகாதார பணியாளர்களுக்கு சிக்னல் கொடுத்துவிடும். இதன் மூலம் கழிவுகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் அகற்றப்படும்.  அடுத்து வரும் மாதங்களில் 200 ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகள் நாடு முழுவதும் வினியோகிக்கப்பட உள்ளது. அதன் பின்னர், நாட்டில் உள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகளுக்கு கொடுப்பதற்காக ஒரு லட்சம் குப்பைத் தொட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. கழிவுகளை சேகரிப்பது முதல் பிரிப்பது, எடுத்து செல்வது, மறுசுழற்சிக்கான  குப்பைகளை பிரித்தல் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் தொழில்நுட்பம்  பயன்பாட்டில் உள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் குறைவாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் உரிய நேரத்தில் கழிவுகளை அகற்றுவது மிகவும் அத்தியாவசியமாகும். இந்தியாவில் தற்போது 28 சதவீத கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனால், குப்பைகளின் அளவு 5 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai , Waste, Smart Garbage Tank, Chennai IIT
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...