×

பிராங்ளின் நிறுவன விவகாரத்தை தொடர்ந்து நடவடிக்கை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி சிறப்பு கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு சிறப்பு கடனுதவியாக 50,000 கோடி அனுமதி அளித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து வரலாறு காணாத சரிவை சந்தித்தன. பங்குகளின் மதிப்பு அதல பாதாளத்தில் சரிந்தது. அதோடு, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகி விட்டது. குறிப்பாக,  பிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம், தான் நடத்தி வந்த 6 திட்டங்களை மூடுவதாக, கடந்த 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டங்களில் கடந்த 2018 ஆகஸ்ட் இறுதியில் 47,658 கோடியாக இருந்த முதலீட்டு தொகை, தற்போது 26,779 கோடியாக சரிந்து விட்டது. இதில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் முதலீட்டாளர்கள் திணறி வருகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை அபாயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்காக 50,000 கோடி சிறப்பு கடனுதவியை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார். இந்த சிறப்பு கடனுதவி திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. வரும் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 இந்த திட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும். வங்கிகள் இந்த தொகையை தேவைப்படும் மியூச்சவல் பண்ட்களுக்கு கடனாக வழங்கும். கடன் பத்திரங்கள், டெபாசிட்கள் போன்றவற்றின் அடிப்படையில் மியூச்சுவல் பண்ட்களுக்கு கடன்கள் வழங்கப்படும் எனவும், நாட்டின் பொருளாதார பாதிப்புகளை கண்காணித்து அதை மீட்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.5 சதவீதத்தை எட்டுவது மிகவும் சலாவானதாக இருக்கும் என சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.

Tags : companies ,RBI , Franklin Company, Mutual Fund Companies, Reserve Bank
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...