×

அன்னூர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை: 20,000 வாழை மரங்கள் முறிந்து சேதம்

அன்னூர்: அன்னூரில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் 500 ஏக்கரில் நேந்திரன் வாழை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று இரவு அன்னூர் வடக்கு பகுதியில் சூறாவளி காற்றுடன் அரை மணிநேரம் கனமழை பெய்தது. இதனால், அக்கரைசெங்கபள்ளி,​ பச்சாகவுண்டனூர், கோவில்பாளையம், இலக்கியபாளையம், ஆம்போதி நாச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 20,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமானது. இவை இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்லும் நிலையில் இருந்தது. தற்போது, பிஞ்சாக இருப்பதால் அதை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சூறாவளி காற்றுக்கு ரோட்டோரத்தில் இருந்த 3 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. 20 ஏக்கருக்கு மேல் மக்காச்சோள பயிர்களும் சாய்ந்து விழுந்தது.இதுகுறித்து அப்பகுதி விவசாயி தமிழ்செல்வன் கூறுகையில்,`இந்த சேதம் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் யாரும் விசாரிக்கவில்லை. ஆய்வும் செய்யவில்லை. இதனால், விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : Annur , Annoor, heavy rain, banana trees, damage
× RELATED சிறுமுகை-அன்னூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்