×

எப்போதும் இல்லாத வகையில் பெரும் ஏமாற்றம் தந்த கோடை காலம்: சுற்றுலாத்தலங்களில் சிறுவியாபாரிகள் வேதனை

சேலம்: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு கோடை காலம் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக சுற்றுலா தலங்களை சேர்ந்த சிறுவியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலமாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதும், மாணவ, மாணவியர் பெற்றோருடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்வதும் வழக்கமான ஒன்று. ஆனால், நடப்பாண்டு கொரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுப்பதற்காக, சமூக விலகலை செயல்படுத்தும் நோக்கத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் பூட்டப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மனிதர்கள் கால்படாத இடமாக மாறி உள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்கள் மட்டுமன்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும்  பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் ஆளரவமற்று காணப்படுகிறது. இதனால் நடப்பாண்டு கோடை காலம், எப்போதும் இல்லாத வகையில் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது என்கின்றனர் சிறுவியாபாரிகள்.

இது குறித்து சுற்றுலாத்தலங்கள் சார்ந்த சிறுவியாபாரிகள் கூறியதாவது: சுற்றுலாத் தலங்களை பொறுத்தவரை பண்டிகை நாட்களில் தான், அங்குள்ள சிறுவியாபாரிகளுக்கு ஓரளவு வியாபாரம் நடக்கும். ஆனால்,  ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் மக்களால் களை கட்டி, வியாபாரம் சுறுசுறுப்படையும். அப்போது கிடைக்கும் வருவாயே, எங்களின் ஓராண்டு வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும். வழக்கமாக மார்ச் 2வது வாரத்திலேயே சுற்றுலாத்தலங்களில் பயணிகள் கூட்டம் களைகட்டும். ஆனால் நடப்பாண்டு அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. கொரோனா வைரஸ் பீதியால், மக்கள் கூடும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் பூட்டப்பட்டு விட்டது.

அதிலும் ஏப்ரல் மாதத்தில் வரும் கூட்டமும், வியாபாரமும் மிகவும் முக்கியமானது. ஆனால் ஊரடங்கு, இதற்கும் தடைபோட்டு விட்டது. தற்போது மே 3ம்தேதி வரை, ஊரைடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுமா? அப்படியே திறந்தாலும் எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் கூட்டம் வருமா? என்பதெல்லாம்  கேள்விக்குறி தான். சிறுவியாபாரிகள் மட்டுமன்றி ஏற்காடு, மேட்டூர், கொல்லிமலையில்  சுற்றுலா வழிகாட்டிகள், ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில்  நடப்பாண்டு கோடை காலம் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்கினால் சிரமங்கள் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு சிறுவியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆகாயத்தாமரையால் மாசடையும் ஏற்காடு ஏரி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு படகு இல்லம், மான் பூங்கா, லேடீஸ் சீட், தாவரவியல் பூங்கா, சேர்வராயன் கோயில், பக்கோடா பாயின்ட், அண்ணா பூங்கா அனைத்து இடங்களும் பயணிகளின் கவனம் ஈர்த்து வருகிறது. இவை அனைத்திற்கும் சிகரம் வைப்பது போல், பரந்து விரிந்த ஏற்காடு ஏரி அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தற்போது  ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் போதிய பராமரிப்பின்றி முக்கிய இடங்கள் அனைத்தும் பாழடைந்து கிடக்கிறது.

இதில் ஏரியில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து புதர்மண்டி கிடப்பது, இயற்கை ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஊரடங்கால் ஏற்காடு வெறிச்சோடி கிடக்கிறது.  குறிப்பாக ஏரியை பராமரிப்பதாகவே தெரியவில்லை. தற்போது மழை இல்லாததாலும், கோடை வெயில் காரணமாகவும்  ஏரியில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. தண்ணீர் குறைந்து வருவதால், ஏரியில் ஆகாய தாமரை அதிகளவில் படர்ந்துள்ளது. ஏரி முழுக்க ஆகாயத்தாமரை படர்ந்து அசுத்தம் ஏற்படுவதற்குள், அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Summertime, tourism
× RELATED உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி...