×

குமரியில் முடங்கி கிடக்கும் கைத்தறி நெசவு கூடம்; வறுமையின் பிடியில் தவிக்கும் நெசவாளர்கள்: ஊரடங்கால் சொற்ப வருமானமும் போனது என வேதனை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஊரடங்கால் வேலை இல்லாமல் வறுமையின் பிடியில் கைத்தறி நெசவாளர்கள் சிக்கியுள்ளனர். வறுமையில் வாடும் தங்களுக்கு அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கைத்தறி நெசவும் பிரதான தொழிலாக உள்ளது. வடசேரி,   பள்ளியாடி, அம்சி,  உட்பட பல்வேறு பகுதிகளில் கைத்தறி நெசவு தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 2500 முதல் 3000 கைத்தறி நெசவு தொழிற்கூடங்கள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

நாளொன்றுக்கு ரூ.100 முதல் 150 வரை வருமானம் ஈட்டி வந்த இவர்களுக்கு தற்போது வேலை இல்லாததால் அந்த வருமானமும் இல்லாமல் குடும்பச் செலவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் உள்ளனர். வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு அன்றாட சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல்  அவதிப்பட்டு வரும் இவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய உள்ளவர்கள் ஆவார்கள். தற்போது வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் இவர்கள் தங்களுக்கு அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே நூல் தட்டுப்பாடு காரணமாக வேலை இல்லாமல் அவதிபட்டு வந்த தங்களுக்கு கொரோனா தடை உத்தரவால் பாதி வேலை கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும், அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய்  கேஸ் செலவுக்கே போதாத நிலையில் உள்ளது என்றும் கூறினர். குடும்பம் ஒன்றுக்கு மாதம் ரூ. 6,000 வீதம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வடசேரியை சேர்ந்த நெசவு தொழிலாளி லெட்சுமி கூறுகையில், நூல் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே 1 மாதம் வேலை இல்லாமல் தான் இருந்தோம்.

இந்த நிலையில் மார்ச் 25ம் தேதியில் இருந்து போடப்பட்ட ஊரடங்கு 1 மாதத்தையும் தாண்டி உள்ளது. இப்போது இரு மாதங்களாக வேலை இல்லை. கேரளாவுக்கு செல்ல வேண்டிய ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. ரேஷனில் கொடுத்த ஆயிரம் ரூபாய் தீர்ந்து போனது. வருமானத்துக்கே வழியில்லாமல் தவிக்கிறோம். நல வாரியத்தின் மூலமும் உதவிகள் இல்லை. எனவே அனைத்து நெசவு  தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Kumari ,Weavers , Kumari, linen weaver, weavers
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...