×

12 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை; குமரியில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தடை விலகுமா?... வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் பீதி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் நிலையில், 28 நாட்கள் நிறைவடைந்த பின் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட அனுமதி கிடைக்குமா? என்ற நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் பீதி ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் நேற்று முன் தினம் மாலை வரை 5 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 11 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இந்த 11 பேரில், ஏற்கனவே தந்தை, மகன் என 2 பேர் குணம் அடைந்து விட்டனர்.

இவர்களின் குடும்பத்தினர் சிகிச்சையில் உள்ளதால், இவர்கள் இருவரும் வீடு செல்லாமல், தனிமை வார்டில் உள்ளனர். மீதி 9 பேரும் நல்ல நிலையில் உள்ளனர். மே முதல் வாரத்துக்குள் இவர்கள் அடுத்தடுத்து வீடு திரும்புவார்கள் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த 14ம் தேதிக்கு பின்னர் நோய் தொற்று பாதிப்பு புதிதாக இல்லாத நிலையில் தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் சேலத்தில் இருந்து பணிக்கு வந்த பட்டாலியன் போலீஸ்காரர் ஒருவர், கொரோனா சோதனைக்கு பயந்து தனது நண்பர்களுடன் காரில் தப்ப முயன்றார். அவர்களையும் மடக்கி பிடித்து கொரோனா சோதனை நடத்தினர்.

இவர்களுக்கு பரிசோதனை முடிவு நேற்று முன் தினம் இரவு வந்தது. இவர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளனர். கொரோனா பாதித்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன. அந்த வகையில்  நாகர்கோவில் டென்னிசன் ரோடு பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தார். இவர் பூரண நலம் அடைந்து வீடு திரும்பினார். இவர் வசித்த பகுதி கடந்த மாதம் 30ம் தேதி சீல் வைக்கப்பட்டது. 28 நாட்களுக்கு பிறகு இந்த தடை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாருக்கும் சமூக பரவல் தொற்று இல்லை என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் பகுதிகளிலும் தடை நீக்கப்படலாம் என தெரிகிறது. மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமிபுரத்தில் 6 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இவர்களில் ஒருவர் மட்டுமே வீடு திரும்பி உள்ளார். இன்னும் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த பகுதியும் கடந்த 31ம் தேதி முதல் சீல் வைக்கப்பட்டது. இங்கும் கடந்த 12 நாட்களாக யாருக்கும் நோய் தொற்று இல்லை இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போதைய நிலையில் கொரோனா கட்டுக்குள் தான் உள்ளது. ஆனால் இனி பரவாது என உறுதியாக கூற முடியாது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

இவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள சென்னையில் இருந்து பலர் வந்த வண்ணம் உள்ளனர். சிலர் அனுமதியின்றியும் மாவட்டத்துக்குள் நுழைகிறார்கள். இவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். 14 நாள் முதல் 28 நாட்கள் வரை இவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு மீறி வெளியே சுற்றி திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.  வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் வீடுகளில், ஸ்டிக்கர் ஒட்டி உள்ளோம். நோய் பரவலை கட்டுப்படுத்த அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கொரோனா கட்டுக்குள் வந்தால் மே 3ம் தேதிக்கு பின் தடைகள் விலக வாய்ப்பு உண்டா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : nobody ,areas ,Kumari ,Will Kumari , Corona infection, Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...