×

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பரவும் காட்டுத்தீ; குடியிருப்பு பகுதிகளுக்கு ‘குடியேறும்’ சிறுத்தை, யானை: மலைக்கிராம மக்கள் ‘திக்... திக்...’

சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைக்கிராமப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதால், குடியிருப்பு பகுதிகளுக்கு வனவிலங்குகள் இடம்பெயருகின்றன. இதனால், மலைக்கிராம மக்கள் பீதியில் உள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் மேகமலை, மணலாறு உளிட்ட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில், வன உயிரின சரணாலயமாக இருக்கும் மேகமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடுகள், பன்றிகள், பாம்பு, சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள், அரிய வகை பறவைகள் உள்ளன.

போதிய மழை இல்லாததால், வனவிலங்குகள் தேயிலை தோட்டப்பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. ஹேவேவிஸ், தூவானம், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகளில் நீர் அருந்திச் செல்கின்றன. மேலும், கடந்த ஒரு வாரமாக ஹைவேவிஸ் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருவதால் யானைக்கூட்டங்கள் இடம்பெயர்ந்து, வெண்ணியாறு உள்பட மலைக்கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் புகுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் வெண்ணியாறு நீர்த்தேக்கத்தில் ஒற்றை யானை நீர் அருந்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வெண்ணியாறு கிராமத்தில் பாலம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில், சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் சென்றது.  இதனால், மலைக்கிராம மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட கம்பம், சின்னமனூர் வனத்துறையினர் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைத்து, வனவிலங்குகள் இடம் பெயர்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Highways Mountain ,hill people ,areas , Highways, wildfires, residential areas, leopards, elephants
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை