×

களக்காடு மலையடிவாரத்தில் வனத்துறை சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் ஊருக்குள் விலங்குகள் நுழையாமல் தடுக்க வனத்துறை சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த காப்பகம் தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமைக்குரியது. கடந்த 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் உதயமானது. இதன் மொத்த பரப்பளவு 1,601 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அடர்ந்த காடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமாக திகழும் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு, அம்பை முண்டந்துறை, பாபநாசம், கடையம் வன சரகங்கள் உள்ளன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் மட்டுமின்றி, சிங்கவால்குரங்கு, கருமந்தி, அனுமன் குரங்கு, நீலகிரி வரையாடு, கரடி, யானை, செந்நாய், சிறுத்தை, கடமான், கடம்பை மான், புள்ளிமான் காட்டெருமை, காட்டுப்பன்றி, கழுதைப்புலி, காட்டு பூனை உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளும் உள்ளன. இவைகள் அடிக்கடி மலையடிவார பகுதிகளில் புகுவது வழக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்று வனவிலங்குகளுக்கும் பரவக்கூடும் என்பதால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக வனவிலங்குகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்படுவதை தவிர்க்க களக்காடு புலிகள் காப்பகத்தில் துணை இயக்குநர் இளங்கோ மேற்பார்வையில் வன சரகர்கள் புகழேந்தி, பாலாஜி, வனவர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள் உள்பட 8 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் மலையடிவார பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர். மேலும் இவர்கள் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊருக்குள் ஏதேனும் வன விலங்குகள் நடமாட்டம் காணப்பட்டால் உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும், வனவிலங்குகளின் பாதுகாப்பையும் உறுதி படுத்துவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
களக்காடு வன சரகர் புகழேந்தி, வனவர் ராம்பிரகாஷ் மற்றும் வனத்துறையினர், கொழுந்துமாமலை பீட் பகுதியில் மலையடிவாரத்தில் முருகன் கோயிலுக்கு அருகே உள்ள குளத்துப்பகுதியில் நேற்று அதிகாலை  ரோந்து சென்றனர். அப்போது 3 பேர் வேல்கம்பு, கத்தி, அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் சுற்றியதை கண்டனர். வனத்துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடினர். வனத்துறையினர் விரட்டி சென்று 3 பேரையும் பிடித்தனர். அவர்களை களக்காடு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் காருக்குறிச்சி 2ம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலகண்ணன்(32), மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி(25), சுப்பிரமணியன் மகன் பேச்சிமுத்து(27) என்பதும், இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட ஆயுதங்களுடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் வனத்துறையினர் கைது செய்து தலா ரூ.7 ஆயிரம் வீதம் மூவருக்கும் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தியதால் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Forest Department Special Patrol Patrol ,Kalakkad Mountain Range ,Kalakkad Mountain Range Forest Department Special Patrol Patrol , Field, Forest Department, Patrol
× RELATED யானை தாக்கி விவசாயி பலி