×

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டு சிறை: தமிழக அரசு அவசர சட்டம்

* தமிழக அரசு அவசர சட்டம்
* இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவாது என்று எவ்வளவு சொல்லியும் சில கும்பல் ஏற்க மறுத்து வந்தது.
* உடலை அடக்கம் செய்ய விடாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் சமூக விரோதிகள் தடுத்து வந்தனர்.
* இதையடுத்து உடல் அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுப்பவர்களை 3 ஆண்டு சிறையில் தள்ள அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

சென்னை: கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. சீனாவில் வுகான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக காஞ்சிபுரத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கொரோனா நோயால் பாதித்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு சமூக பரவல், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 30 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த சிவப்பு மண்டலமாக சுகாதாரத்துறை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழக தலைநகராமான சென்னையில் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை புள்ளிவிவரப்படி தற்போது 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல சுகாதாரத்துறையினர் தினசரி அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி சென்னையில் சராசரியாக தினசரி 50க்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

 இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்வது தமிழத்தில் பெரும் சவாலாக திடீரென மாறியது. காரணம் அந்த உடல்கள் மூலம் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படலாம் என்று அருகில் வசிக்கும் மக்களின் மனநிலையே காரணம். ஆனால் இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவாது என்று சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விளக்கியும் பொதுமக்கள் ஏற்க மறுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோன சிகிச்சை பலனளிக்காமல் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை மருத்துவமனையில் இறந்தார். அவரது உடலை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று அடக்கம் அல்லது தகனம் செய்வது பாதுகாப்பானது இல்லை என்று தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதனால், சென்னைக்கு அருகில் உள்ள மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறையினர் முயன்றனர். ஆனால் மயானத்தை சுற்றி வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மருத்துவரின் உடல் திரும்பி கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில  கடந்த 18ம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சைமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை மருத்துவ ஊழியர்கள், நோய் தொற்று ஏற்படாதபடி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோதும், அப்பகுதி மக்கள் கல்வீச்சு, சாலைமறியல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுகாதாரத்துறை அதிகாரி, ஆம்புலன்ஸ் டிரைவர் உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர் சைமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பலருக்கு உயிர் கொடுத்துள்ள ஒரு டாக்டரின் உடலை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யகூட முடியவில்லையே என்று டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களும் வேதனை தெரிவித்தனர். தமிழக அரசும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற நடவடிக்கைகளில் இனி யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

எனினும் நீலகிரி, ஈரோடு உட்பட  மாநிலத்தின் பல இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம்  செய்ய விடாமல் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலை தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இது கொரோனா ஒழிப்பில் களப்பணியில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வேதனையை ஏற்படுத்தியது. இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ துறையினருக்கு உரிய மரியாதையை அவர்கள் இறந்த பிறகு தர வேண்டும் என்று பல அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுக்கும் செயலும் தடுக்க முயற்சிப்பதும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றம். இதற்கு கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் (கொரோனா) உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்வதை தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939, பிரிவு-74ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : death ,Coroner ,Prisoner Blocking ,Corporal Dying: Corruption of Government Emergency Law , Corona, Victims, Mortality, 3 Years of Jail, Government of Tamil Nadu
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...