×

புயல் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்ட ஆந்திரா, ஒடிசாவை சேர்ந்த 38 பேர் சொந்த படகு வாங்கி தப்பி ஓட்டம்:

சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது சென்னை புயல் நிவாரண முகாமில் அடைக்கலம் அடைந்த ஆந்திர மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 38 மீனவர்கள், 2 லட்சத்திற்கு படகு ஒன்றை விலைக்கு வாங்கி தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து படகு விற்பனை செய்த நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா நோய் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. அதேபோல் இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும் தடை உத்தரவு பொருந்தும். இதனால் இந்திய கடலோர பகுதிகளில் மீன்பிடித்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே உள்ள புயல் நிவாரண முகாமில் கடலோர பாதுகாப்பு படை உத்தரவுப்படி தங்கவைக்கப்பட்டனர்.

அந்த வகையில், கடந்த 20ம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 38 மீனவர்கள்  வடசென்னையில் உள்ள புயல் நிவாரண முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தமிழக மீன் வளத்துறை சார்பில் உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 38 மீனவர்கள் திடீரென புயல் நிவாரண முகாமில் இருந்து மாயமாகிவிட்டனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது.

நிவாரண முகாமில் தங்கி இருந்த 38 மீனவர்களும் சென்னையில் உள்ள படகு விற்பனை  செய்யும்  புரோக்கர் ஒருவர் உதவியுடன் ₹2 லட்சத்திற்கு படகு ஒன்றை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. அந்த படகு மூலம் 38 மீனவர்களும் முதற்கட்டமாக ஆந்திரா மாநிலம் காகுளம் பகுதிக்கு சென்றடைந்தது விசாரணையில் தெரியவந்தது. அங்கு ஆந்திர மாநில மீனவர்கள் இறங்கியுள்ளனர்.  அங்கிருந்து படகில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பல நூறு கடல் மைல் தொலைவில் உள்ள ஒடிசாவுக்கு சென்றடைந்து சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது. சென்னை புயல் நிவாரண முகாமில் இருந்த 38 பேரில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர்கள் கொரோனா  வைரஸ் தொற்றுடன் சென்று இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில மீனவர்கள் தப்பி செல்ல படகு விற்பனை செய்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தின் போது புயல் நிவாரண முகாமில் இருந்து வெளிமாநில மீனவர்கள் 38 பேர் தப்பி சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Andhra Pradesh ,Odisha ,Storm ,relief camps , Storm Relief Camp, Andhra Pradesh, Odisha, Boat
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி