×

ஆன்லைனில் அட்சய திருதியை விற்பனை மந்தம்

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, நகைக்கடைகள் நேற்று ஆன்லைன் மூலம் நகை, தங்கக்காசுகளை விற்பனை செய்தன. ஆண்டுதோறும் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன்படி நேற்று அட்சய திருதியை தினம். இருப்பினும், ஊரடங்கால்  நகை கடைகள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள், திறக்கப்பட முடியாத சூழல் உள்ளது. இதனால், வீடுகளில் இருந்தபடி மக்கள் தங்க நகைகள், தங்கக் காசுகள் வாங்க வசதியாக, ஆன்லைனில் நகை விற்பனை செய்வதாக நகைக்கடைகள் அறிவித்திருந்தன. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்த நகைகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவு நீங்கிய பின் அல்லது தமிழக அரசு கடைகள் திறக்க அனுமதி வழங்கிய பின், கடைகளில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என நகைக்கடைகள் அறிவித்தன.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், தமிழகம் முழுவதும், 2,000 கோடி மதிப்புள்ள, 5,500 கிலோ தங்கத்தை மக்கள் வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மாதம் 25ம் தேதி முதல் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நகை விற்பனை அடியோடு சரிந்துள்ளது என நகைக்கடைக் காரர்கள் தெரிவித்திருந்தனர். ஆபரண தங்கம் சவரன் 36,000 தாண்டி விற்கப்பட்டது.  இந்நிலையில், அட்சய திருதியை நாளான நேற்று சில வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் நகை, தங்கக்காசுகளை ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டை விட விற்பனை மிகவும் மந்தமாகத்தான் இருந்துள்ளது..

இதுகுறித்து அகில இந்திய நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் கவுன்சில் தலைவர் அனந்த பத்மநாபன் கூறுகையில், ‘‘ஊரடங்கு 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டு அட்சய திருதியைக்கு நகைக்கடைகளை திறக்க முடியவில்லை. எனவே, ஆன்லைன் விற்பனை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். எனினும், கடந்த ஆண்டு அட்சய திருதியை விட இந்த ஆண்டில் நகை விற்பனை 97 சதவீதம் முதல் 98 சதவீதம் சரிய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பிறகு நகை விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க கவுரவ செய லாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், “நகை விற்பனைக்காக அல்லாமல், வாடிக்கை யாளர்களின் அட்சய திருதியை சென்டி மென்டுக்கு மதிப்பளித்து தான் ஆன்லைனில் நகை ஆர்டர் செய்ய வசதி செய்யப்பட்டது’’  என்றார்.

சாலையோரத்தில் நகை விற்பனை
அட்சயதிருதியையான நேற்று நகைக்கடைகள் மூடப்பட்டிருந்தாலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சில நகைக்கடைக்காரர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து நகை தேவையை கேட்டறிந்தனர். நேற்று காலை நகை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு வீட்டருகே சென்று நின்றபடி நகை விற்பனை செய்தனர். கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தபோதும், நகைக்கடை உரிமையாளர்கள் போனில் ஆர்டர் பெற்று சாலையோரம் தங்க நகை விற்பனையில் ஈடுபட்டது பெருந்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : slowdown , Online, atcaya tiruti
× RELATED உலக பொருளாதாரம் மந்தமான நிலையில்...