×

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பல கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை

சென்னை: தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பல கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதூர், மாம்பாக்கம், மொரப்பாக்கம், முதுகரை, செம்முண்டி, செய்யூர் தாலுகாவில் இரண்யசித்தி, தேவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அங்கு, மதுராந்தகம், செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்காக கொண்டு சென்று வைத்துள்ளனர். இதில், சில கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது.

மேலும், கொள்முதல் செய்ய வேண்டிய விவசாயிகளின் நெல்லும், அந்தந்த கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காலை மதுராந்தகம் மற்றும் செய்யூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையின் காரணமாக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டை நெல் மழையில் நனைந்து சேதமாகி உள்ளன. குறிப்பாக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மூட்டைகள் அனைத்தும் நேற்று பெய்த மழையில் முழுவதும் நனைந்து சேதமடைந்துள்ளது. இதேபோன்று, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு சென்று கொட்டி வைத்த நெல் குவியல்களும் மழையின் காரணமாக மிகுந்த பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே, பல கஷ்டங்களுக்கு இடையே  அறுவடை முடிந்து விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லும் வீணாகிப்போனது.

இது விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால், பல கோடி மதிப்புள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாபாரிகளுக்கு முன்னுரிமை ஏன்?
பல இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சுற்றுப்புற  கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை  கொள்முதலுக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை சுத்தம் செய்தல், மூட்டை பிடித்தல் மற்றும் ஏற்றுக்கூலி உள்ளிட்டவைகள் சேர்த்து, ஒரு மூட்டைக்கு 45 விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது. ஆனால், இங்கு நெல்லை கொண்டு வரும் வியாபாரிகளிடம் மூட்டைக்கு 150 வரை பெற்றுக்கொள்ளும் அரசு அதிகாரிகள், அவர்கள் கொண்டுவரும் நெற்களை மட்டும் உடனுக்குடனும், இரவோடு இரவாகவும் ஏற்றுமதி செய்து விடுகின்றனர். இதனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல் ஏற்றுமதி செய்ய 15 நாட்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags : Paddy , Government Rice Procurement Centers, Rice Bundles, Farmers
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...