×

விபரீத அரசியல் விளம்பரத்துக்காக பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல் பேரிடரை எதிர்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: விபரீத அரசியல் விளம்பரத்துக்காக பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.  விவேகத்துடன் செயல்பட்டு பேரிடரை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மதுரை - கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் ‘முழுமையான ஊரடங்கு’ என, எவ்வித முன் தயாரிப்புகளுமின்றி, அரசு அறிவித்தது, பொதுமக்களை பெரும் அச்சத்துக்கும் குழப்பத்திற்கும் பரபரப்பிற்கும் உள்ளாக்கியது.

நான்கு நாட்களுக்கு என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவசர ஆத்திரத்திலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று முன்தினம் (ஏப்ரல் 25) மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து, அதனால் எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள்  காத்துவந்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த் தொற்றுப் பரவல் குறித்த சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி ஆகும்.  ‘முழு ஊரடங்கு’ நடைமுறைக்கு வருவதால், ஏப்ரல் 25 - ஒருநாள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தை மாலை வரை நீட்டிப்பு செய்தால், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

பேரிடர் காலத்திலும் கூட, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதிகார பாணியில், எல்லாவற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்துடன் “மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும்”என்று ஒரு வாரத்திற்கு முன் சொன்ன ‘டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி, தற்போது 4 நாள் முழு ஊரடங்கு என அறிவித்தது. அதனால், மக்கள் பதற்றமடைந்து அனைத்து கடைகளிலும் பெருங் கூட்டம் குவிந்ததால் இந்த ஊரடங்கின் நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகும் சூழல் உருவாகிவிட்டது.

நிலைமை கைமீறிப் போனதற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையரிடமிருந்து, மதியம் 3 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என அறிக்கை வெளியாகிறது. அதற்குள்  சென்னையில் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிடவே, மக்கள் ஓடி அலைந்துஅல்லலுற வேண்டியதாயிற்று. சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதே பதற்றம்தான், காட்சி ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மக்கள் கூட்டம் தொடர்பான படங்களும் செய்திகளும் வெளியான பிறகு, முழு ஊரடங்கு நாட்களிலும் காய்கறிக் கடைகள் - பால் விற்பனையகங்கள் திறந்திருக்கும் என அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.  

சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அனைவரின் நெஞ்சத்தையும் அதிர வைத்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகளுடன், மூச்சுத் திணறல் காரணமாக அவசரச் சிகிச்சைப் பிரிவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய மருத்துவர்களுக்குத் தற்காப்பு உடை  தரப்படாததால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடியாமல், மூத்த மருத்துவர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள்  கண்ணெதிரே அந்த இளைஞர், எந்த சிகிச்சையும் கிடைக்கப் பெறாமல் துடிதுடித்து இறந்துபோனார். இது அரசாங்கத்தின் அலட்சியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.

அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களைத் தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும். பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொண்டு, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்படுமாறு அன்புடன் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mukta Stalin ,disaster ,civilians , Politics, MK Stalin, Tamil Nadu Government
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...