×

ஊரடங்கு காலத்தில் வீட்டில் யாராவது துன்புறுத்தினால் பெண்கள் புகார் அளிக்கலாம்

* தங்கும் இடம் இலவசம்
* தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாராவது பெண்களை துன்புறுத்தினால் பெண்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருக்கும்  ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் இருக்க உதவ வேண்டிய இந்த வேளையில், குடும்ப சண்டைகளும், பெண்களுக்கான வன்முறைகளும் ஆங்காங்கே நடப்பதாக செய்தி வருகிறது. இது வருந்தத்தக்க போக்காகும். இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பாதுகாப்பு அலுவலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக நலத் துறை மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், இடைக்கால தங்கும் இல்லங்கள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் ஸ்வதார் இல்லங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, இலவச சட்ட உதவி, மன நல ஆலோசனை ஆகியவை வழங்கப்படும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவர்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்வரை தங்கள் குழந்தைகளுடன் அங்கேயே தங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள்
பெண்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும்,  குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தயங்காமல் பெண்கள் உதவி எண்கள்: 181, 1091, 122, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகாமையில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் மீது 2,963 பெண்கள் புகார்:
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், கடந்த 24 நாட்களில் 2,963 பேர் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி, மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்பு முகாம்களில் உள்ள வெளி மாநில பெண்கள் தொழிலாளர்கள், விடுதியில் தங்கி உள்ள பெண்கள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு வேண்டும் என்று அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை போலீசார் மற்றும் அ னைத்து மகளிர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பை தொடர்ந்து, கடந்த 1ம்தேதி முதல் 24ம் தேதி வரை மாநில முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாக கட்டுப்பாட்டு அறைக்கு 2,963 அழைப்புகள் வந்துள்ளன. குறிப்பிட்ட புகாரின் அடிப்படையில்படி 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,396 புகார்களின் படி பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. 557 புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளன.


Tags : Women ,someone ,curfew ,home , Curfew, Women, Government of Tamil Nadu
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...