×

நாகர்கோவிலில் 100 இளம்பெண்களுடன் காதல் லீலை கைதான வாலிபரின் லேப்டாப், செல்போன்கள் சிக்கின: நண்பர் வீட்டில் 2 மணி நேரம் ரெய்டு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் சமூக வலைதளங்களில் பழகி 100 இளம்பெண்களுடன் காதல் லீலையில் ஈடுபட்டு கைதான வாலிபரின் லேப் டாப், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி கடைகள் நடத்தி வருகிறார். இவரது மகன் காசி என்ற சுஜி (26). பட்டதாரியான இவர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்துள்ளது. இவ்வாறு இவரிடம் ஏமாந்த சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டார் போலீசார் 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து காசியை கைது செய்து நேற்று முன்தினம் மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.

காசியின் சமூக வலைதள கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பல்வேறு போலி பெயர்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி 100 இளம்பெண்களை வலையில் வீழ்த்தி தனது ஆசையை தீர்த்துக் கொண்டதுடன், நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதுவரை 70 இளம்பெண்கள் இவரது தொடர்பில் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.  ஆனால் ஒரு பெண் டாக்டர் மட்டுமே புகார் அளித்துள்ளார். மேலும் பல இளம்பெண்கள் புகார் அளிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காசி தனது நண்பர்களுடன் அடிக்கடி பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளார். தோழிகளையும் உடன் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரிக்க காசியின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். இதில் முதற்கட்டமாக அவரது நெருங்கிய நண்பரான வக்கீல் ஒருவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 2 மணி நேரம் சோதனை நடந்துள்ளது. ஆனால், எதுவும் சிக்க வில்லை என போலீசார் கூறினர். இதே போல் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஸ்வீட் கடை உரிமையாளர் மகன் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

இதற்கிடையே காசியின் தந்தை நடத்தி வரும் கோழிப்பண்ணையில் போலீசார் சோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்திருந்த காசியின் லேப் டாப்பை  கைப்பற்றினர். மேலும் நவீன ரக மொபைல் வாட்ச், செல்போன், 2 ஹார்டு டிஸ்க் போன்றவற்றையும் கைப்பற்றினர்.  ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி அவர்களை சீரழித்த காசி, அந்த காட்சிகளை வீடியோ பதிவு செய்தும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே அது போன்ற ஆதாரங்கள் லேப்டாப், செல்போன்களில் சிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது சைபர் கிரைம்  மூலம் லேப்டாப்பில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

விஐபிக்கள் குடும்ப பெண்கள் கலக்கம்
காசியிடம் ஏமாந்த இளம்பெண்கள் பலர், வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஏற்கனவே நாகர்கோவிலில் காவல்துறை அதிகாரி ஒருவரின் மகளை ஏமாற்றிய காசி, பின்னர் தொடர்ந்து பல அதிகாரிகளின் மகள்களை வலையில் வீழ்த்தி உள்ளார். பேஸ்புக்கில் ஆர்வமாக இருக்கும் விஐபிக்களின் மகள்களை குறி வைத்து, காய்களை நகர்த்தி உள்ளார். தற்போது இவரிடம் அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்த பெண்களின் பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள். இதில் பல விஐபிக்களின் மகள்கள், குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். எங்கு தங்களையும் விசாரணைக்கு அழைப்பார்களோ? என்ற பயத்தில் அந்த குடும்ப பெண்கள் உள்ளனர்.

Tags : teenagers ,Nagercoil 100 ,women ,raid ,Nagercoil ,Young girl ,house , In Nagercoil, 100 young women, romantic lee, laptop, cell p
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...