×

போச்சம்பள்ளி பகுதியில் சூளைகளில் தேங்கி கிடக்கும் 10 லட்சம் செங்கற்கள்

* ஊரடங்கால் விற்பனை பாதிப்பு
* நிவாரணம் வழங்க கோரிக்கை

போச்சம்பள்ளி :  ஊரடங்கு உத்தரவால் போச்சம்பள்ளி சூளைகளில் சுமார் 10 லட்சம் செங்கல் தேக்கமடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் தரமானதாக உள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தினசரி லட்சக்கணக்கில் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இதனால், செங்கல் உற்பத்தியாளர்களுக்க்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. மேலும், செங்கல் உற்பத்தி மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இவ்வாறு மக்கள் வாழ்வாதாரத்தில் பெரும் பங்கு வகித்து வந்த செங்கல் சூளை தொழில், கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட லட்சக்கணக்கான செங்கற்கள் மலை போல் தேங்கி கிடக்கிறது. மேலும், அறுக்கப்பட்ட பச்சை செங்கற்களையும் சூளையிலிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போதிய வருவாய் இன்றி தவித்து வருகிறார்கள்.

 இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘போச்சம்பள்ளி பகுதியில் தயாரிக்கப்படும் செங்கற்களுக்கு வெளியிடங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செங்கற்களை மொத்தமாக விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாதமாக விற்பனைக்கு அனுப்ப வழியின்றி சூளையிலேயே சுமார் 10 லட்சம் செங்கற்கள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால், அறுத்த பச்சை செங்கற்களையும் சூளையில் போட வழியின்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுட்ட செங்கற்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க வழியின்றியும், அறுத்த கற்களை வேக வைக்க முடியாததாலும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : area ,Pochampally , lockdown,pechampalli ,Bricks
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு