×

உடல் அடக்கத்தை தடுத்தால் கடும் நடவடிக்கை பாயும்: ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகர காவல்துறை கமிஷனர்

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சென்னை மாநகர் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியில் வருவதை தடுக்கவும், மக்கள் நடமாடுவதை கண்காணிக்கவும் சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறந்து இருக்காது. எனவே, இந்த காலகட்டத்தில் முழு ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்களின் வாகனங்கள் அனைத்தும் சட்டப்படி பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்படும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் டாக்டர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் சிலர் தடுத்தனர்.  இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை காவல்துறை வருவதற்கு முன்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அனைத்து மருத்துவமனைகளின் முதல்வருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்கும் போதோ அல்லது எரிக்கும் போதோ காவல்துறையினர் தக்க பாதுகாப்பு அளிப்பார்கள். இதன் மூலம் இனி வருங்காலங்களில் எந்த பிரச்னையும் ஏற்படாது. அதையும் மீறி உடலை அடக்கம் ெசய்யவிடாமல் தடுத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறை சார்பில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் முதல் அனைத்து இடங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அந்த காவலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவுக்கு உள்ளது. அதில் எந்த குறைபாடும் கிடையாது. எவ்வளவு கேட்டாலும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. சானிடைசர், மாஸ்க் கொடுத்துள்ளோம். மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உடல் முழுவதும் அணிந்து கொள்ளும் உடையும் தரப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு உதவியாக காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு செல்லும் காவலர்களுக்கு பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி, சுகாதாரத்துறையுடன் இணைந்து காவல்துறையும் ஈடுபட்டு வருகிறது. மக்கள் நலன் காக்கவே ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களும் இதனை அறிந்து கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்கும் போதோ அல்லது எரிக்கும் போதோ காவல்துறையினர் தக்க பாதுகாப்பு அளிப்பார்கள். இதன் மூலம் இனி வருங்காலங்களில் எந்த பிரச்னையும் ஏற்படாது.


Tags : AK Viswanathan ,Municipal Police Commissioner ,Chennai , Strict action , physical bullying, AK Viswanathan, Chennai Municipal Police, Commissioner
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...