×

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்க 2 லட்சம் மஞ்சள் பாக்கெட்டுக்கு ஆர்டர்

*ஈரோட்டில் பேக்கிங் பணி தீவிரம்

ஈரோடு :தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படுவதற்காக 2 லட்சம் மஞ்சள் பாக்கெட்டுகளை தயார் செய்ய ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சள் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யும் பணி ஈரோட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டுறவு சங்கத்தின் சார்பாக  மஞ்சள் பொடி, சாம்பார், ரசம், மட்டன், சிக்கன், மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மசாலா பொடிகளை தயார் செய்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து வருகிறது.   தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் மசாலா பொடிகள் தயாரிப்பது வெகுவாக குறைந்துள்ளது. 10 பேர், 15 பேரை வைத்து வேலை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் மளிகை பொருட்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் மஞ்சள் தூளும் இடம் பெற்றுள்ளதால் மஞ்சள் பாக்கெட்டுகளை தயார் செய்ய இந்த நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே முதல்கட்டமாக நாமக்கல், கரூர், கோவை ஆகிய மாவட்டஙகளுக்கு 50 ஆயிரம் மஞ்சள் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் மஞ்சள் பாக்கெட்டுகள் தயார் செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து மஞ்சளை அரைத்து பேக்கிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
 இதுகுறித்து சங்க பணியாளர்கள் கூறுகையில், ‘‘இந்த கூட்டுறவு நிறுவனம் மூலமாக தினமும் 10 டன் மஞ்சள் தூள் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆள் பற்றாக்குறையால் தற்போது ஒன்றரை டன் அளவிற்கே தயாரிக்கப்படுகிறது.

ரேஷன்கடைகள் மூலமாக மளிகை பொருட்கள் பட்டியலில் மஞ்சள் உள்ளதால் அதை 100 கிராம் பாக்கெட்டுகளாக தயார் செய்து வழங்க இந்த கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.   அதன்படி சேலத்திற்கு 50 ஆயிரம், கரூருக்கு 35 ஆயிரம், கன்னியாகுமரிக்கு 3 ஆயிரம், ராமநாதபுரத்திற்கு 30 ஆயிரம், அறந்தாங்கிக்கு 30 ஆயிரம் பாக்கெட்டுகள் என பல்வேறு மாவட்டங்களுக்கும் ரேஷன்கடைகளுக்கு அனுப்பி வைக்க 2 லட்சம் பாக்கெட்டுகளுக்கு புதிதாக ஆர்டர் பெறப்பட்டுள்ளது. மஞ்சள் தூளை தயாரிக்க 35 ஆயிரம் கிலோ மஞ்சள் இருப்பு உள்ளது. இந்த மஞ்சளை அரைத்து இயந்திரங்கள் மூலமாக பேக்கிங் செய்யப்படுகிறது.

2 லட்சம் பாக்கெட்டுகளுக்கு 20 ஆயிரம் கிலோ மஞ்சள் பயன்படுத்தப்படவுள்ளது. இன்னும் 15 ஆயிரம் கிலோ மஞ்சள் உள்ள நிலையில் 1.50 லட்சம் பாக்கெட்டுகள் தயார் செய்யலாம். அதற்கு பிறகு பெறப்படும் ஆர்டரை பொருத்து மஞ்சளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Tags : ration shops ,Tamilnadu Rationshops , erode,Tamilnadu Rationshops ,Yellow pocket
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...