×

அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை; கனடாவில் முதியோர் இல்லங்களில் 63% இறப்பு: இழப்பீடு கேட்டு உறவினர்கள் வழக்கு

மாண்ட்ரீல்: கனடாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 63 சதவீதம் பேர் முதியோர் இல்லங்களில் தங்கி இருந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சம்பந்த உறவினர்கள் இல்லங்களின் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். கனடாவில் கொரோனா வைரசால் 44,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனா இறப்புகளில் பெரும்பாலானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், அவர்களில் 63 சதவீதம் பேர் மாண்ட்ரீல் மற்றும் நாட்டின் பிற நகரங்களில் அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் வசிப்பதாகவும் ஒரு புதிய அறிக்கை வெளியாகி உள்ளது. மாண்ட்ரீலில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் பணிபுரியும் நடாலி ஸ்டீக் டவுச்செட் கூறுகையில், ‘எங்களது முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மொத்தமுள்ள 180 முதியவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

எங்கள் நிலைமையை யாரும் கவனிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் இல்லை. எங்களிடம் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லை’ என்றார். கனடாவில் முதியோர் இல்லங்கள் நீண்ட கால பராமரிப்பு வசதி (சி.எச்.எஸ்.எல்.டி) திட்டம் என்று அழைக்கப்படுகின்றன. கனடாவின் கியூபெக் நகரில் நடந்த இறப்புகளில், 97 சதவீதம் பேரில் 60 வயதுக்கு மேற்பட்டவர் முதியோர் இல்லங்களில் வசித்து வந்தனர். கனடா ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, ‘முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணிபுரியும் நபர்களுக்கு பிபிஇ மற்றும் சரியான முகக் கவசம்ல கையுறைகள் கூட இல்லை. அதனால்தான் அவர்கள் சிகிச்சையில் தயக்கம் காட்டுகிறார்கள். கியூபெக் செவிலியர் சங்கம் அத்தகைய பராமரிப்பு இல்லங்களுக்கு உதவ அறிவித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது. கியூபெக்கில் ஒரு முதியோர் இல்லத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 10 பேர் இறந்து வருகின்றனர். அழுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

நாங்கள் இங்கே ஒரு குடும்பமாக வாழ்கிறோம். முதியோர் தங்கள் வாழ்க்கையின் கடைசி நாட்களில் நிம்மதியாக வாழ இங்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சை இல்லாமல் தனியாக இறப்பதை நாங்கள் காண்கிறோம்’ என்றார். மாண்ட்ரீலின் வெஸ்ட் ஐலேண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில், ஒரே நாளில் 31 பேர் இறந்தனர். கனடாவில் சமூக ஊடகங்களில், வயதானவர்களை கவனித்துக்கொள்வதில்லை என்று மக்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகின்றனர். மாண்ட்ரீலில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தனது பாட்டி இறந்ததைத் தொடர்ந்து ஏப். 16ம் தேதி ஒரு பெண் ஒருவர் 2 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு பராமரிப்பு இல்லத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : deaths ,homes ,relatives ,Canada , Canada, Home of the Elderly, Death
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை