×

144 தடையால் நெல்லையில் வீட்டில் எளிய முறையில் நடந்த திருமணம்: வீடியோ கான்பரன்சில் உறவினர்கள் வாழ்த்து

நெல்லை: 144 தடை உத்தரவால் நெல்லையில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட மணமக்களை உறவினர்கள் வீடியோ கான்பரன்சில் வாழ்த்தினர். நெல்லை டவுனைச் சேர்ந்த வரத சுப்பிரமணியன்- கோமதி தம்பதி மகன் சதீஷ்குமார் (29). ஆழ்வார்குறிச்சி ஆறுமுகம்- நாகலட்சுமி தம்பதி மகள் சித்ரா (24). இவர்களது திருமணம் 2 மாதங்களுக்கு முன்னர் நிச்சயிக்கப்பட்டது. நெல்லை டவுனில் உள்ள ஒரு கோயிலில் அட்சய திரிதியையுடன் கூடிய முகூர்த்த நாளான இன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் மார்ச் 24 நள்ளிரவு முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்க 144 தடையுத்தரவு  போடப்பட்டு, மே 3ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இன்று நெல்லை மாநகரில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதனால் மணமகள் மற்றும் அவரது பெற்றோர், ஆழ்வார்குறிச்சி விஏஓவிடம் முறைப்படி அனுமதி பெற்று நேற்றே நெல்லை வந்துவிட்டனர்.

பின்னர் இன்று அதிகாலை மணமகன் வீட்டில் வைத்து மணமக்களின் பெற்றோர் முன்னிலையில் விளக்கு முன் வைத்து மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டினார். இவர்களது திருமணத்தை வீட்டில் உள்ள கைபேசி மூலம் வீடியோ கால் முறையில் உள்ளூர் மற்றும் சென்னை, பெங்களூரில் உள்ள உறவினர்களுக்கு காட்டினர். அவர்கள் வீடியோ கால் மூலமாக மணமக்களை வாழ்த்தி ஆசி வழங்கினர். இதுகுறித்து மணமகன் பெற்றோர் கூறுகையில், ‘‘அனைத்து உறவினர்களையும் ஊரடங்கால் அழைக்க முடியாத நிலையில் நாங்களும், மணமகள் பெற்றோரும் ஏற்கனவே நிச்சயித்த நாளில் எளிய முறையில் திருமணத்தை முடித்துள்ளோம். உறவினர்கள் வீடியோ கால் மூலம் வாழ்த்தினர். மிக விமரிசையாக மகனின் திருமணத்தை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும், அரசின் உத்தரவை மதித்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் எளிமையாக நடத்தினோம்’’ என்றனர்.

Tags : Home ,Relatives ,Video Conferencing ,Nellie ,Home Nellie , 144 Prohibition, Paddy, Marriage
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...