×

சத்தியமங்கலம் அருகே உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை: வனப்பகுதியில் விடுவிப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கேர்மாளம் வனப்பகுதியில் உடல்நலம் குன்றி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஆண்  யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் வனச்சரகத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமம் அருகே ஆண் யானை உடல்நலம் குன்றிய நிலையில் நடக்க கூட முடியாமல் சுற்றித்திரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கேர்மாளம்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சுமார் 10 வயதுள்ள அந்த ஆண் யானை உடல்நலம் குன்றிய நிலையில் சோர்வுடன் நின்றிருந்ததை கண்டனர்.

இதையடுத்து வனத்துறை உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் உடல் நலம் குன்றிய யானைக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையில் வனக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். வனத்துறையினர் யானையின் உடலுக்கு தண்ணீர் ஊற்றினர். கால்நடை மருத்துவர் அசோகன் யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினார். இதைத் தொடர்ந்து வனக்குழுவினர் யானையை கண்காணித்தனர். ஊசியில் மருந்து செலுத்தியபின் யானை உடல்நலம் தேறி சுறுசுறுப்புடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். சிகிச்சை அளிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் தொடர்ந்து   கண்காணித்து வருகின்றனர்.


Tags : Sathyamangalam ,release , Sathyamangalam, Elephant, Treatment
× RELATED மேட்டூர் வனச்சரகத்தில் நோயால் அவதிப்படும் யானைக்கு சிகிச்சை