×

தமிழக விவசாயி சோக கதையை கேட்டு 12 டன் முட்டைகோஸ் வாங்கிய எம்.பி.: டிவிட்டர் பதிவால் நெகிழ்ச்சி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, தான் பயிரிட்ட முட்டைகோசை வாங்க ஆள் இல்லை என டிவிட்டரில் விவசாயி பதிவிட்டதால் அவரிடம் இருந்த 12 டன் முட்டைக்கோஸை கர்நாடகா எம்.பி. வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக - கர்நாடக  மாநில எல்லையில் அமைந்துள்ள கெட்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணையன். இவர் இரண்டு மாநில எல்லையில் உள்ள ஒட்டரள்ளி  கிராமத்தில் 3.5 ஏக்கரில் முட்டைக்கோஸ் பயிரிட்டிருந்தார். கோஸ் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தபோது ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயி  கண்ணையன் பயிரிட்ட முட்டைக்கோஸை விலை பேசி வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் கவலையடைந்த விவசாயி கண்ணையன், தனது தோட்டத்தில் பயிரிடப்பட்ட முட்டைகோஸ் ஊரடங்கு காரணமாக விற்பனையாகாமல் உள்ளதாகவும் முட்டைகோஸை வாங்க யாராவது முன்வந்து உதவ வேண்டும் எனவும் வீடியோவில் பேசி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த டிவிட்டர் பக்கத்தில் விவசாயி கண்ணையனுக்கு உதவ  வேண்டும் என  பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதை அறிந்த கர்நாடக மாநிலம் பெங்களுரூ தெற்கு தொகுதி பா.ஜ. எம்பி தேஜஸ்வி சூர்யா தனது உதவியாளர் மூலம் கண்ணையனை தொடர்பு கொண்டு டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவை பார்த்ததாகவும், நீங்கள் பயிரிட்டுள்ள முட்டைகோசில் 12 டன்  விலைக்கு வாங்கி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து  கண்ணையன் தோட்டத்தில் இருந்த முட்டைகோஸ் கிலோ ரூ.2.50க்கு விலை பேசி  வாங்கப்பட்டு பெங்களுரு தெற்கு தொகுதிக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம்  செய்யப்பட்டது. தமிழக விவசாயியான கண்ணையனிடம் இருந்து உரிய விலை கொடுத்து வாங்கி சென்று பொதுமக்களுக்கு  இலவசமாக விநியோகித்த தேஜஸ்வி சூர்யா  எம்.பி.க்கு ண்ணையன் நன்றி தெரிவித்ததோடு கன்னடத்தில் பேசி அந்த வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் தமிழக விவசாயிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி. உதவி செய்த சம்பவம் தாளவாடி மலைப்பகுதி  விவசாயிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3.5 ஏக்கர்  பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள முட்டைகோஸ் 100 டன் வரை விளைச்சல் ஆகியுள்ள  நிலையில், தற்போது 12 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  கோவையை சேர்ந்த தன்னார்வலர்கள் பாலதண்டாயுதம், அஸ்வினி ஆகிய இருவரும்  சேர்ந்து 8 ஆயிரம் கிலோ முட்டை கோஸ் வேண்டும் என்றும், இதை நீலகிரி  மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களை சேர்ந்த ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க  ஏற்பாடு செய்யுமாறு விவசாயி கண்ணையனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து  கண்ணையன் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரை தொடர்புகொண்டு பேசி இதற்கு ஒப்புதல் பெற்று ரூ.45 ஆயிரத்துக்கு 8 டன் முட்டைகோஸ் நேற்று அறுவடை செய்து லாரியில் ஏற்றி கூடலூருக்கு அனுப்பி வைத்தார். 8 டன் முட்டைகோஸ் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை கிராம மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தற்போது 80 டன் வரை தனது தோட்டத்தில் முட்டைகோஸ்  உள்ளதாகவும், ஒரு கிலோ முட்டைகோஸ் விளைவிக்க ரூ.4 செலவாகும்  நிலையில்  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிலோ ரூ.2.50க்கு கொடுக்க  உள்ளதாகவும், தன்னார்வலர்கள் முட்டைகோஸை குறைந்த விலையில்  தன்னிடம் வாங்கி  பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்கலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளார். தாளவாடி  மலைப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் பல்வேறு ரக காய்கறிகள் பயிரிட்டு  அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி. உதவிக்கரம் நீட்டியதுபோல், தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளும்  தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கறிகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்க  முன்வந்தால் விவசாயிகள் நஷ்டம்  ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறைந்த விலைக்கு முட்டைகோஸ் கொள்முதல் செய்ய விவசாயி கண்ணையனை தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் எண்.9444989543, 8667580022.

Tags : Tamil Nadu , Tamil Nadu Farmer, Cabbage, MP
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...