×

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பனைத் தொழிலாளர்கள்: நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சுரண்டை: கொரோனா தடை உத்தரவால் பனைத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளனர். பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் மக்களின் தேவைக்கு உபயோகப்படுகிறது. சுற்றுச்சூழலையும் நிலத்தடிநீரையும் காக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் ஆங்காங்கே பனை விதைகளை நட்டு பனைமரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பனை தொழிலாளர்களின் வாழ்க்கை, நாடு ஆறுமாதம் காடு ஆறுமாதம் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. கோடைகாலத்தில் பனையில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்குகளை விற்று வாழ்நாளை கழிக்கும் நிலையில் தொழிலாளர்கள் உள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சேந்தமரம், வேலப்பநாடாரூர், கடையாலுருட்டி, அருணாசலபுரம், வீரசிகாமணி போன்ற கிராமங்களில் பனைத்தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இந்த பகுதியில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு வாகனங்களில் பதநீர், நுங்கு கொண்டு சென்று விற்கின்றனர். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு ஆம்னிபஸ் மூலம் அனுப்புகின்றனர். தற்போது ஊரடங்கால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் தொலைதூர மாவட்டங்களுக்கு நுங்கை அனுப்ப முடியவில்லை. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்தால் ஒவ்வொரு கிராமங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் விற்பனை செய்ய முடியாததால் மரத்திலேயே நுங்கு காய்த்து பழுத்து கீழே விழுந்து யாருக்கும் பயனில்லாமல் போகிறது. இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான பனைத்தொழிலாளர்கள் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.

நலவாரியத்தில் உறுப்பினராக பதியாததால் அரசின் உதவித்தொகை பெற முடியவில்லை. இதனால் அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகிவிட்டது. எனவே பனை தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஓய்வு ஊதியம் மற்றும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களது குடும்பத்தை காக்க உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Livelihood palm workers ,Corona ,Palmyra , Corona curfew, palm workers
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...