×

கொரோனா ஒழிப்பில் தீவிரமாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டு: தூய்மை பணியாளர்களுக்கு பரிவட்டம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு சாதனை படைத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர்களுக்கு சால்வை, மாலை, பரிவட்டம் கட்டி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் தெருக்களை சுத்தம் செய்வது, கிருமி நாசினி மருந்துகளை அடிப்பது உட்பட பல்வேறு சுகாதார பணிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக சின்னாளபட்டியில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு ஜவுளி வியாபாரிகள் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று வியாபாரம் செய்துவிட்டு திரும்புகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து சின்னாளபட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் 48 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்துகளை 3 வேளையும் அடித்து அப்பகுதி மக்களை பாதுகாத்து வந்தது. இது தவிர இயந்திரம் மூலம் ஸ்பிரேயர் கொண்டு கிருமி நாசினி மருந்துகளை தெருக்கள், மற்றும் வீடுகளுக்கு அடித்து வருவதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் சின்னாளபட்டியில் ஒரு நபருக்கு கூட கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை பணியாளர்களின் அயராது உழைப்பை பாராட்டி பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு விழா பேரூராட்சி வளாகத்தில் நடந்தது. காலை 11 மணியளவில் தூய்மை பணிகளுக்கு சென்று வந்த தூய்மை பணியாளர்கள் சமூக விலகலை கடைபிடித்து நின்றனர். இதுபோல சாதனை படைத்த பேரூராட்சியின் செயல் அலுவலர் கலையரசி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கத்துரை, சரவணன், அகிலன் உட்பட பேரூராட்சி பணியாளர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக அகில இந்திய அனைத்து செட்டியார்கள் பாதுகாப்பு பேரவை நிறுவனர் கே.ரவிக்குமார்ஜி தலைமையில் சால்வை, மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கீழக்கோட்டை ஜாதி நாட்டாண்மை சிவசண்முகம், தேவாங்கர் சமுதாய நிர்வாகி பி.பொம்மையா, இளைஞர் அணியை சேர்ந்த தேவா, 8வது வார்டு அதிமுக பிரமுகர் விஜயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது குறித்து கே.ரவிக்குமார்ஜி கூறுகையில்,‘‘எங்கள் ஊரில் வசிக்கும் மக்கள் நலமுடன் வாழ அர்பணிப்புடன் சேவை செய்து வரும் தூய்மை பணியாளர்களை பாராட்டவதற்காக மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது,’’என்றார்.

Tags : Bargaining Administration Active for Commendation , Corona, Peace Administration, Appreciation
× RELATED மிளகு சாகுபடியில் புதுப்புது...