×

பாசன வாய்க்காலில் பள்ளம் தோண்டியபோது 400 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

மன்னார்குடி கோட்டூர் அருகே பாசன வாய்க்காலில் மண் எடுக்க விவசாயிகள் பள்ளம் தோண்டியபோது 400 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நருவளி களப்பால் கிராமத்தில் வடக்கு உடையார்தெரு வழியாக செல்லும் பாசன வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளான பசுபதி (44), ரவிச்சந்திரன் (46) ஆகியோர் விவசாய தேவைக்காக மண் எடுப்பதற்காக மண்வெட்டி, கடப்பாரையால் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்கடியில் பானை போன்ற பொருள் இருந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சனிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் மன்னார்குடி தாசில்தார் கார்த்திக், களப்பால் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது வாய்க்காலில் புதைந்து கிடப்பது முதுமக்கள் தாழி என்பதை உறுதி செய்து கலெக்டர் ஆனந்த் மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் தாசில்தார் கார்த்திக் மற்றும் வருவாய்த்துறையினர் சேர்ந்து வாய்க்காலில் பள்ளம் தோண்டி 5 அடி உயரமுள்ள முதுமக்கள் தாழியை மீட்டனர். மீட்கப்பட்ட தாழிக்குள் எலும்பு துண்டுகள் கிடந்தது. பின்னர் மீட்கப்பட்ட முதுமக்கள் தாழியை மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வாய்க்காலில் கண்டுடெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி 400 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கலாம். தாழிக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பு துண்டுகளை ஆய்வு செய்த பிறகே புதைக்கப்பட்டது ஆண் உடலா அல்லது பெண் உடலா என்பது தெரியவரும் என்றனர். மன்னார்குடி மற்றும் கோட்டூர் வட்டாரத்தில் முதன்முதலாக முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : corridor ,dredging , 400-year-old,elderly corridor, dredging , irrigation channels
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...