×

மணவாளக்குறிச்சி அருகே ஆடுகளை கடித்து குதறியது மரநாய்: கண்காணிப்பு கேமராவில் உருவம் சிக்கியது

குளச்சல்: மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவிலை சேர்ந்தவர் சிலுவைமுத்து (63).  கொத்தனார். இவர் வீட்டில் 2 ஆடுகள் வளர்த்து வந்தார். கடந்த 18ம் தேதி காலை  அவை வீட்டில் ரத்த காயங்களுடன் கடித்து குதறப்பட்ட  நிலையில் இறந்து கிடந்தன.  மணவாளக்குறிச்சி போலீசார் மற்றும் வேளிமலை,  பூதப்பாண்டி வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று  இறந்து கிடந்த ஆடுகளை  பார்வையிட்டனர். பின்னர் அங்கு தரையில் பதிந்த கால் தடங்களையும் ஆய்வு  செய்தனர். இந்த நிலையில் மறுநாள்  ஆண்டார்விளையில் ஒரு வீட்டில் சுமார் 9 கிலோ எடையுள்ள வான்கோழியை மர்ம  விலங்கு பிடித்து சென்றது. 20ம் தேதி இரவு  தருவை நேசமணி என்பவர்  வீட்டில் கட்டி போட்டிருந்த ஆட்டின் சப்தம் கேட்டு வீட்டினர் கதவை  திறந்ததால் மர்ம விலங்கு ஒன்று தப்பி ஓடியதை வீட்டினர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து  வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் இரவோடு இரவாக  அங்கு சென்று 2 இடங்களில் 4 கூண்டுகள் வைத்தனர். ஆனால் விலங்கு வராததால் அனைவரும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் பிள்ளையார்க்கோவில் சந்திப்பை சுற்றி 6  இடங்களில் கேமராக்களை பொருத்தினர்.ஒருவேளை மர்ம விலங்கு கூண்டில்  சிக்காமல் சென்றால் அது எந்த வகை விலங்கு என்பதை அறிய கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளதாகவும், கேமராவில் பதியும் விலங்கின் இனம் அடிப்படையில்  மேல் நடவடிக்கை தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

 இந்நிலையில் வனத்துறையினர் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மரநாய் ஒன்று தோப்புக்குள் இருந்து வெளியே வந்து உலாவி விட்டு  மீண்டும் சென்று மறையும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இதையடுத்து மணவாளக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் ஆடுகளை கடித்து கொன்றது இந்த மரநாய்தான் என வனத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த  மரநாயை பிடித்து காட்டில் கொண்டு விடும் நடவடிக்கையில்  வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Manavalakurichi , Bridegrooms, goats, porcelain, camera
× RELATED குமரி அருகே பாலத்தின் பக்கவாட்டு...