×

ஊரடங்கால் திருச்செந்தூர் முருகன் கோயில் வெறிச் உணவு கிடைக்காமல் வாடி வதங்கும் மயில்கள்

திருச்செந்தூர்: ஊரடங்கால் திருச்செந்தூர் முருகன் கோயில் வெறிச்சோடியது. இதனால் உணவு கிடைக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் வாடி வருகின்றன.  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், எழில் கொஞ்சும் கடற்கரையுடன் அமைந்துள்ளதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். தற்போது ஊரடங்கால் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகள், பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கோயில் வளாகப்பகுதியில் மரங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் உணவு கிடைக்காமல் வாடி வதங்கி வருகின்றன.

பெரும்பாலும் இந்த மயில்களுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களே உணவு வழங்குவார்கள். தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் மயில்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இதனால் மயில்கள் உணவுக்காக கூவிக்கொண்டே இருக்கின்றன.  இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, ‘திருச்செந்தூர் கோயில் மூடப்பட்டு உள்ளதால் இங்கு வாழும் நூற்றுக்கணக்கான மயில்கள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. எட்டயபுரம், குறுக்குச்சாலை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மயில்கள் உள்ளன. இந்த மயில்கள்தான் திருவிழா காலங்களில் பக்தர்கள் வாகனங்களில் கோயிலுக்கு வரும்போது அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளன. தேசிய பறவையான மயில், ஊரடங்கு காலத்தில் மனிதர்களைபோல உணவுக்காக பரிதவிப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆதரவற்ற மனிதர்களுக்கு அளிப்பதுபோல தன்னார்வலர்கள் இந்த மயில்களுக்கும் உணவு வழங்கினால் அவைகளை பட்டினி சாவில் இருந்து மீட்க முடியும்’ என்றனர்.

Tags : Urundangal Thiruchendur Murugan Temple Urundangal Thiruchendur Murugan Temple , The curfew. Thiruchendur Murugan Temple, Peacocks
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...