×

ஊரடங்கு உத்தரவால் பட்டறைகள் மூடல் வருமானமின்றி தவிக்கும் செட்டிநாடு பாத்திர உற்பத்தி தொழிலாளர்கள்

காரைக்குடி : செட்டிநாடு பாத்திர உற்பத்தியில் ஈடுபட்டு வரும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலையின்றி வீடுகளில் முடங்கி கிடப்பதால் குடும்பம் நடத்த கூட வருமானம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரைக்குடி பகுதியில் பாராம்பரிய சிறப்புமிக்க பங்களா, செட்டிநாடு கைத்தறி சேலைகள் வரிசையில் செட்டிநாடு பாத்திரங்களுக்கும் முக்கிய இடம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் பாத்திர உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இயந்திரங்கள் இன்றி கைகளால் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒருசில வேலைகள் மட்டும் இயந்திரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வருவதை தவிர மற்ற வேலைகள் கைகளாலேயே தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் குடம், பால்கேன், கொட்டான் உள்பட பல்வேறு பொருட்கள் தமிழக அளவில் பிரபலம். தரமான பொருளாக உள்ளதால் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. பாத்திர தொழிலுக்கான வரி என்பது கடந்த காலங்களில் மாநிலத்திற்கு நுழைவுவரி, உற்பத்தி வரி மற்றும் விற்பனை வரி மட்டுமே இருந்தது. தற்போது ஜிஎஸ்டி காரணமாக 18 சதவீதம் வரியாக உயர்த்தப்பட்டுள்ளதால் இத்தொழில் பின்னடைவுக்கு சென்றுள்ளது.

1992க்கு முன்னர் 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடும் வரி உயர்வு காரணமாக பல எவர்சில்வர் பட்டறைகள் மூடப்பட்டுள்ளதால் 500க்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் எவர்சில்வர் பட்டறைகள் மூடப்பட்டு வேலையில்லாததால் இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு குடும்பம் நடத்த கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளளனர்.

எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்கள் சங்க தலைவர் மெய்யழகன் கூறுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின்னர் பாத்திர உற்பத்தி தொழில் முடங்கி உள்ளது. இத்தொழிலை நம்பி இருந்த பலர் மாற்றுபணிக்கு சென்று விட்ட நிலையில் தற்போது மிககுறைந்த தொழிலாளர்களே உள்ளனர். எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு என எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை. எவர்சில்வர் பாத்திர தொழிலாளர்களுக்கு என நலவாரியம் இல்லை. தற்போது கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த மாதம் 24ம் தேதி முதல் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 வேலைக்கு செல்லமுடியாத நிலையில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கி உள்ளது. இது எப்படி குடும்பம் நடத்த போதும் என தெரியவில்லை. தற்போதைய பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு போதுமான நிதி உதவி வழங்க வேண்டும் என்றார். துணைத்தலைவர் கல்யாணகுமார், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் வீரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Closing ,workshops ,Chettinad ,character stores ,karaikudi , lockdown ,Closure of workshops,Karaikudi,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை