×

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தகவலை மறைத்தால் 16 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை: தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள் எச்சரிக்கை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் தொற்று அறிகுறி ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அரசு அறிவித்துள்ள உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்று அறிகுறி இருந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அரசு மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.ஆனால் சில மருத்துவமனைகளில் அரசு அனுமதியின்றி வைரஸ் தொற்றுநோய் அறிகுறி இருந்தும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பாமல் அவர்களே சிகிச்சை அளித்ததால் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து இது சம்பந்தமாக சில மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர் ஆகியவற்றுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில் இருமல், காய்ச்சல், சளி உள்ளிட்டவை இருப்பதாக தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்தால் உடனடியாக அவர்களை அரசு சுகாதார மையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தாம்பரம் மற்றும் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் சார்பில் நகராட்சி பகுதிகளிலுள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* மருத்துவமனையில் தினசரி கொரோனா நோய் தொடர்பான முன்னெச்சரிக்கை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனைத்து பணியாளர் மற்றும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.
* மருத்துவமனை பணியாளர்கள் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய அனுமதிக்க கூடாது.
* தினம்தோறும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
* யாருக்கேனும் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று அறிகுறி கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
* தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது சுகாதார சட்ட பிரிவுகள் 52, 54, 56, 59, 62, 70, 75, 76, 81, 134, 140, 141, 143, 144, 145 மற்றும் 138 ஆகிய 16 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : hospitals ,Tambaram ,Pallavaram Private ,Pallavaram , Municipalities ,Tambaram, Pallavaram warned ,private hospitals, corona information
× RELATED மருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர்,...