×

சிவிசி ஆணையராக கோத்தாரி பதவியேற்பு: ஜனாதிபதி பதவிப் பிரமாணம்

புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக பதவி வகித்த கே.வி.சவுத்ரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்து வந்தது. புதிய தலைமை ஆணையரை நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்தது. இக்குழு, ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த சஞ்சய் கோத்தாரியை கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்தது.
இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். கடந்த 2017 ஜூலையில் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் கோத்தாரி. இந்நிலையில், அவர் புதிய மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரபதி பவனில் நடந்த இவ்விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு சஞ்சய் கோத்தாரி பெயரை பரிந்துரைத்தபோதே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சஞ்சய் கோத்தாரியை தேர்வு செய்யும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அவர் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படாதவர், பரிசீலனையிலும் இல்லாத நபரை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்திருப்பதால் இந்த நியமனத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தலைமை ஆணையர் மற்றும் இரு ஆணையாளர்களை கொண்டதாகும். இதுவரை ஆணையர் சரத் குமார் இடைக்கால தலைமை ஆணையராக பதவி வகித்து வந்தார். தற்போது சஞ்சய் கோத்தாரி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், இன்னும் ஒரு ஆணையர் பதவி மட்டுமே காலியாக உள்ளது. இதற்கிடையே, ஜனாதிபதியின் செயலாளராக கபில் தேவ் திரிபாதியை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : commissioner ,Kothari ,CVC ,President , Kothari sworn, CVC commissioner, President sworn ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...