இளையான்குடி : இளையான்குடி கண்மாயில் ஊரடங்கு தடையை மீறி மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பெரிய கண்மாயில் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் சார்பில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மீன்பிடி திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை திடீரென தடையை மீறி இளையான்குடி பெரியகண்மாயில் சுற்று வட்டார கிராமமக்கள் வலை, வேட்டி மற்றும் சேலையை பயன்படுத்தி மீன்பிடி திருவிழாவை நடத்தினர். இதில் இந்திரா நகர், காந்தி நகர், கொங்கம்பட்டி, இடையவலசை, திருவுடையார்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மீன்களை பிடித்தனர். கெண்டை, கெழுத்தி, குரவை, அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்து, அள்ளிச் சென்றனர்.ஊரடங்கு தடையை மீறி யாரும் வெளியே சுற்றக் கூடாது என்ற நிலையில், மீன்பிடி திருவிழா நடைபெற்றது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி இளையான்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
